வீட்டிலேயே சுகப்பிரசவம் புகழ் ஹீலர் பாஸ்கர் கைது....

Last Modified வெள்ளி, 3 ஆகஸ்ட் 2018 (13:42 IST)
வீட்டிலேயே சுகப்பிரசவம் பார்க்க பயிற்சி தருவதாக கூறி மக்களிடம் பணம் வசூலித்த ஹீலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 
பொறியியல் படிப்பை முடித்த பாஸ்கர் தானே சுயமாக ஆராய்ச்சி செய்து மருத்துவத்தை கண்டறிந்ததாக கூறியதோடு, அனாடமிக் தெரபி பவுண்டேஷன் எனும் நிறுவனத்தை தொடங்கி பல வருடங்களாக மக்களிடம் உரையாடி வருகிறார். குறிப்பாக ஆங்கில மருத்துவமான அலோபதிக்கு எதிரான கருத்துகளை கூறி மக்களை மூளைச்சலவை செய்து வந்தார். அதோடு, எய்ட்ஸ், சர்க்கரை நோய் ஆகியவற்றை சுலபாக தீர்க்க முடியும் என்கூறி பலரையும் நம்ப வைத்துள்ளார்.
 
சமீபத்தில் திருப்பூயில் ‘யூடியூப்’ வீடியோவை பார்த்து வீட்டிலேயே சுகப்பிரசவத்துக்கு முயற்சி செய்த தனியார் பள்ளி ஆசிரியை கிருத்திகா அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்தார். இது நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில், வீட்டிலேயே சுகப்பிரசவம் செய்ய நிஷ்டை சர்வதேஷ வாழ்வியல் இலவச பயிற்சி முகாம் வருகிற 26ம் தேதி நடைபெறுவதாக ஹீலர் பாஸ்கர் அறிவித்தார். இதன் மூலம், மருந்து மாத்திரைகள், தடுப்பூசிகள், ஸ்கேனிங், ரத்த பரிசோதனை என எதுவும் இல்லாமலும், மருத்துவரிடம் செல்லாமலும் வீட்டிலேயே குழந்தை பெற்றுக்கொள்வது பற்றி பயிற்சி அளிக்கப்படும் என அவர் அறிவித்திருந்தார்.

 
எனவே, அவர் மீது நடவடிககை எடுக்கும்படி சுகாதாரத்துறை அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணையில், சுகப்பிரசவம் குறித்த பயிற்சிக்காக ஹீலர் பாஸ்கர் பலரிடம் ரூ.5 ஆயிரம் பெற்றது தெரியவந்தது. இதுகுறித்து சிலர் போலீசாரிடம் புகாரும் அளித்தனர். எனவே, ஹீலர் பாஸ்கரை மோசடி உள்ளிட்ட சில பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் இன்று கைது செய்தனர். 
 
ஹீலர் பாஸ்கர் யூடியூபில் பல வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இணையதளத்தை நடத்தி அதன் மூலமாகவும் பணம் வசூலித்துள்ளார். இலவச பயிற்சி ஆனால் தனது அமைப்பு சார்பில் ஏழைகளுக்கு உதவி செய்வதற்காக எனக்கூறி நன்கொடை போல் இவர் பணம் வசூலித்து வந்துள்ளார். உடலே மருந்து என்பதுதான் இவரின் தாரக மந்திரம். எல்லா நோய்களையும் இயற்கை மருத்துவத்திலேயே குணப்படுத்தி விட முடியும் என இவர் கூறியதை கேட்டு ஆயிரக்கணக்கானோர் இவர் பயிற்சி முகாம்களில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :