1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 26 நவம்பர் 2019 (08:53 IST)

பள்ளியைக் கட் அடித்த மாணவிகள்… கடத்திச் சென்று தாலி கட்டிய ஆட்டோ டிரைவர்கள் – 3 நாளில் நடந்த விபரீதம் !

பள்ளிக்கு செல்லாமல் கட் அடித்து சுற்றிய மாணவிகளிடம் நல்லவர்கள் போல் நடித்து அவர்களைத் திருப்பூருக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டுள்ளனர் இரு ஆட்டோ ஓட்டுனர்கள்.

சென்னை கண்ணகிநகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியொன்றில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் மூன்று பேரும் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் எடுத்ததால் பெற்றோரை அழைத்து வர சொல்லப்பட்டுள்ளனர். பெற்றோரை அழைத்து வர  பயந்து கொண்டு மூவரும் பள்ளியை கட் அடித்து விட்டு அந்த பகுதியில் பள்ளி சீருடையில் சுற்றித் திரிந்துள்ளனர்.

மாணவிகளைக் கவனித்த கனகராஜ் மற்றும் விஜயக்குமார் எனும் இரு ஆட்டோ ஓட்டுனர்கள் மாணவிகளிடம் பேச்சுக் கொடுத்துள்ளனர். அவர்களின் பேச்சில் மயங்கிய மாணவிகள் அவர்களோடு பீச்சுக்கு சென்றுள்ளனர். அங்கு சென்று பள்ளி நேரம் முடியும் வரை இருந்துவிட்டு வீட்டுக்குத் திரும்பியுள்ளனர். இதே போல மறுநாளும் அவர்களுடன் திரையரங்குக்கு சென்று திரைப்படம் பார்த்துள்ளனர்.

இரண்டு நாட்களாக பள்ளிக்கு செல்லாத விஷயம் பெற்றோருக்கோ ஆசிரியர்களுக்கோ தெரிந்தால் என்னவாகும் என மாணவிகள் பயப்பட, அவர்களிடம் வெளியூர் சென்று திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக இருக்கலாம் என ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார்கள். இதை நம்பிய இரண்டு மாணவிகள் அவர்களோடு சென்றுள்ளனர். ஒரு மாணவி மட்டும் செல்லவில்லை.

மாணவிகளைக் காணாத பெற்றோர் காணாமல் போன 2 இதுபற்றி காவல்நிலையத்தில் புகார் கொடுக்க, அவர்கள் விசாரணையில் மூன்றாவது மாணவியின் மூலம் ஆட்டோ டிரைவர்கள் பற்றிய விவரம் தெரியவந்துள்ளது. அதையடுத்து உடனடியாக கனகராஜ் மற்றும் விஜயக்குமார் ஆகிய இருவரது செல்போன் சிக்னலை வைத்து பின் தொடர்ந்தனர். அதில் அவர்கள் நால்வரும் திருப்பூரில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து அங்கு சென்று போலிஸார் பார்த்தபோது சிறுமிகளுக்கு அவர்கள் தாலி கட்டியிருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.