செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 23 ஜூன் 2020 (15:10 IST)

எச்சில் துப்பினால் ரூ.100, மறுபடி துப்பினால் ரூ.500! – திருப்பூர் கலெக்டர் எச்சரிக்கை!

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளால் முடங்கியுள்ள நிலையில் திருப்பூர் ஆட்சியரின் புதிய உத்தரவு திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் 60 ஆயிரத்தை தாண்டியுள்ளது. பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மக்கள் கொரோனா விழிப்புணர்வுடன் செயல்படுவது என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. சமூக இடைவெளியை பின்பற்றுதல், மாஸ்க் அணிதல், கண்ட இடங்களில் எச்சில் துப்பாமல் இருந்தல் போன்றவற்றை அதிகாரிகள் மக்களுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

தற்போது மாஸ் அணியாமல் சென்றால் அபராதம் என்ற நடைமுறை அமலில் உள்ளதால் மக்கள் அனைவரும் மாஸ்க் அணிந்தே தங்கள் அன்றாட வேலைகளை கவனித்து வருகின்றனர். இந்நிலையில் எச்சில் மூலமும் கொரோனா வேகமாக பரவும் என்பதால் திருப்பூர் ஆட்சியர் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அதன்படி பொது இடங்களில் மாஸ்க் அணியாமல் நடமாடுதல், கண்ட இடங்களில் எச்சில் துப்புதல் போன்றவற்றை செய்தால் முதல் தடவைக்கு ரூ.100 அபராதமாக வசூலிக்கப்படும். மீண்டும் செய்தால் ரூ.500 அபராதமும், அதற்கு பிறகும் தொடர்ந்து செய்தால் காவல்துறை மூலமாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.