வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 8 ஆகஸ்ட் 2020 (13:08 IST)

இனிமேல் இந்த காரணங்களுக்காகவும் இ பாஸ் வழங்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் இ பாஸ் வழங்குவதில் உள்ள சிக்கல்கள் பற்றி குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் இப்போது மேலும் சில காரணங்களுக்காகவும் இ பாஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளை கருத்தில் கொண்டு ஆகஸ்டு இறுதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனால் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்குள்ளாக பயணிக்க உள்ளவர்கள் முன்னதாக இ-பாஸ் பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்கள் பலர் அவசர பயணங்களுக்காக இ-பாஸ் விண்ணப்பித்தும் கிடைக்காததால் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். மறுபுறம் இ-பாஸ் பெற்றுத்தர ஆயிரக்கணக்கில் பணம் வசூல் செய்யும் இடைத்தரகர்கள் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் ஈ பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.

இது சம்மந்தமாக இரு தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி ‘தொழிலாளர்களுக்கான இ பாஸ் மாதம் ஒருமுறை மட்டும் புதுப்பிக்கப்பட்டால் போதும். அதுபோல வெளி மாநிலங்களில் இருந்தும் தொழிலாளர்களை தாராளமாக அழைத்து வரலாம். மேலும் இ பாஸ் எடுக்கும் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படும்’ என அறிவித்துள்ளார்.

இதையடுத்து இன்று சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ள அறிவிப்பில் ஏற்கனவே உள்ள காரணங்களோடு இப்போது மேலும் சில காரணங்களுக்காவும் இ பாஸ் வழங்கப்பட இருக்கிறது. அதில் பணி, வியாபாரம் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான பகுதிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் வழக்கமாக வழங்கப்படும் இ பாஸ்களை விட 36 சதவீதம் அதிகமாக பாஸ்கள் வழங்கப்படும் என சொல்லப்படுகிறது.