வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 8 ஜனவரி 2024 (09:14 IST)

இதுனாலதான் கலைஞர் 100 விழாவுக்கு விஜய், அஜித் போகலை..! – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்!

கலைஞர் நூற்றாண்டு விழாவில் ரஜினி மற்றும் கமல் பேசும்போது எம்ஜிஆர் குறித்த தகவல்களை திரித்து பேசியதாக முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.


 
திரை உலகில் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தால் நேற்று முன் தினம் நடத்தப்பட்டது. இதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தனுஷ் உள்ளிட்ட பல்வேறு முன்னணி திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். ஆனால் நடிகர் விஜய் மற்றும் அஜித் இவ்விழாவில் கலந்துகொள்ளவில்லை.

மேலும் அந்த விழாவில் கருணாநிதி உதவியால் எம்ஜிஆர் பல உயரங்களை தொட்டதாக ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் பேசியிருந்தது அதிமுக வட்டாரத்தில் புகைச்சலை கிளப்பியுள்ளது.

இதுகுறித்து கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் “புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் திரு.கருணாநிதி அவர்களால் தான் சினிமாவில் தொட முடியாத உயரம் சென்றதை போல முன்னணி நடிகர்கள் திரு.ரஜினிகாந்த் மற்றும் திரு.கமல்ஹாசன் ஆகியோர் நேற்று நடந்த விழாவில் உண்மைக்கு மாறாக பேசியுள்ளனர். இனிவரும் காலங்களில் வரலாற்றை மறைக்காமல் பேசினால் நன்று!

புரட்சித்தலைவர் தன் நடிப்பாலும் உழைப்பாலும் தன் வள்ளல் குணங்களாலும் மட்டுமே மக்கள் மனங்களை வென்று நிற்கிறார். ஆயிரமாண்டு கடந்தாலும் அவர் தான் ஆயிரத்தில் ஒருவர். அதை யாராலும் மாற்றவும் முடியாது! மறைக்கவும் முடியாது! அவரது உதவியால் தான் கருணாநிதியே முதலமைச்சரானார். சினிமா துறையை சிறைப்பிடித்து ஸ்கிரிப்டில் உள்ளதை மட்டும் படிக்க சொல்லி கட்டளையிடாமல் மக்கள் பக்கம் திரும்புங்கள் முதல்வரே? இப்படி எல்லாம் நடக்கும் என தெரிந்தே இருபெரும் நடிகர்களான திரு.விஜய் மற்றும் திரு.அஜித் ஆகியோர் விழாவை புறக்கணித்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K