1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 26 ஏப்ரல் 2021 (11:13 IST)

ஸ்டெர்லைட்டுக்கு எதிரானவன்தான்.. ஆக்ஸிஜனுக்காக ஒத்துக்கிறேன்! – திருமாவளவன் கருத்து!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிக்க அனைத்து கட்சி கூட்டத்தில் பலர் ஆதரவு தெரிவித்துள்ளது குறித்து திருமாவளவன் கருத்து கூறியுள்ளார்.

நாட்டில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை எழுந்துள்ள நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய வேதாந்தா நிறுவனம் அனுமதி கேட்டு கோரிக்கை விடுத்தது. இதற்கு தமிழக அரசு மறுத்த நிலையில் தமிழக அரசு ஸ்டெர்லைட்டில் ஆக்ஸிஜன் தயாரிக்க முடியுமா என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இது தொடர்பாக இன்று முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் பல கட்சிகளும் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதற்கு மட்டும் அனுமதிக்கலாம் என ஆதரவை தெரிவித்திருந்தன. இந்த கூட்டத்திற்கு விசிகவிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள விசிக தலைவர் திருமாவளவன் “அனைத்து கட்சி கூட்டம் ஆக்ஸிஜன் உற்பத்திக்காக அல்லாமல் ஆலையை திறக்க நடத்துவது போல் உள்ளது. காற்றை நஞ்சாக்கிய நிறுவனத்திடமே ஆக்ஸிஜன் தயாரித்து கேட்பது நகைமுரணாக உள்ளது. ஸ்டெர்லைட்டுக்கு எதிரானவன் நான் என்றாலும், மக்களின் உயிரை கருத்தில் கொண்டு ஆக்ஸிஜன் தயாரிக்க மட்டும் அனுமதி அளிப்பதை ஏற்கிறேன்” என கூறியுள்ளார்.