1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 14 நவம்பர் 2019 (20:25 IST)

இந்துக்கள் குறித்த சர்ச்சை பேச்சு: வருத்தம் தெரிவித்த திருமாவளவன்

நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பேசியபோது, மசூதி, சர்ச் மற்றும் கோவில் குறித்து சில கருத்துக்களை தெரிவித்தார். அதில் மசூதி, சர்ச் குறித்து பெருமையாகவும், கோவில் குறித்து சர்ச்சையாகவும் அவர் கூறியதை தொடர்ந்து பலர் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர். காங்கிரஸ் பிரமுகர் அமெரிக்கை நாராயணன் அவர்களும் திருமாவளவனுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து திருமாவளவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிக்கை ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: விசிக மகளிர் மாநாட்டில் நான் ஆற்றிய உரையில், 'ஒருசில சொற்கள் இந்துக்களின் உணர்வுகளைக் காயப்படுத்துவதாக உள்ளது' என்று நண்பர் அமெரிக்கை நாராயணன் உள்ளிட்ட சிலர் என்னிடம் கூறினர்.
 
அவை உரைவீச்சின் போக்கில் தன்னியல்பாக தெறித்த சொற்களேயாகும். 'அதில் உள்நோக்கம் இல்லை; உண்மை உண்டு' என்பதை எனது நண்பர்கள் அறிவர். எனினும், அதற்காக நான் வருந்துகிறேன்.
 
ஒரு மணிநேரத்துக்கும் மேல் நான் ஆற்றிய உரையில் 10 நொடிகள் இடம் பெற்றுள்ள ஓரிரு சொற்களை மட்டுமே வெட்டியெடுத்து சிலர் பரப்புகின்றனர்.
 
எஞ்சிய உரை முழுவதும் பாஜகவின் அரசியலுக்கு எதிராக அரசியல்ரீதியாகவே வாதிடும் என்னை, பாஜகவுக்கு எதிராக நிறுத்தாமல் இந்துக்களுக்கு எதிராக நிறுத்த முயற்சிக்கின்றனர்
 
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.