செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 21 அக்டோபர் 2019 (20:16 IST)

ஆஞ்சநேயரை அபேஸ் செய்த பலே திருடர்கள்: கும்பகோணத்தில் பரபரப்பு!

கும்பகோணம் அருகே சாமி கும்பிடுவது போல வந்து ஆஞ்சநேயர் சிலையை திருடி சென்ற கும்பலை போலீஸார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரத்தில் உள்ள கோவிலில் சிலர் சாமி கும்பிட வந்துள்ளனர். பிரசித்தி பெற்ற நாளான அன்று சாமி கும்பிட வந்த அந்த கும்பல் சன்னதியில் இருந்த ஆஞ்சநேயர் சிலையை திருடிக்கொண்டு சென்றுள்ளனர். அவர்கள் சென்ற பிறகு நடை சாத்த சென்ற குருக்கள் சிலை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

கோவிலின் சிசிடிவி கேமராக்களை சோதித்தப்போது ஐந்து பேர் கொண்ட குழு ஒன்று காரில் வந்து இறங்கி சாமி கும்பிட சென்றிருக்கிறார்கள். ஆளில்லாத ஆஞ்சநேயர் சன்னதிக்குள் சென்ற அவர்கள் சாமி கும்பிடுவது போல பாவனை செய்துள்ளார்கள். மூன்று பேர் சிலையை மறைத்தவாறு நிற்க மீத இரண்டு பேர் சுவற்றில் பதிக்கப்பட்டிருந்த அந்த சிலையை கைகளாலேயே அசைத்து பெயர்த்து எடுத்துள்ளனர். பிறகு அதை கொண்டு வந்திருந்த பைக்குள் போட்டுக்கொண்டு அந்த கும்பல் தப்பி சென்றுள்ளது.

சிறிய ரக ஆஞ்சநேயர் சிலை என்பதால் இந்த திருட்டை அவர்கள் வெகு சுலபமாக நடத்தியிருக்கிறார்கள். இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தனிப்படை அமைத்து சிலைக் கடத்தல்காரர்களை தேடி வருகின்றனர். தாங்கள் ஆண்டாண்டு காலமாக வழிபட்டு வந்த சிலை காணாமல் போனது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.