பட்டாவை காட்டினா போதுமா? மூல பத்திரம் எங்கே? – ஸ்டாலினுடன் தொடர் மோதலில் ராமதாஸ்
திமுகவின் முரசொலி அலுவலகம் இருப்பதே பஞ்சமி நிலத்தில்தான் என்று குற்றம் சாட்டிய ராமதாஸ் அந்த இடத்தில் அதற்கு முன்பு என்ன இருந்தது என்பது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
முரசொலி அலுவலகம் அமைந்திருக்கும் நிலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலம் என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதிலளிக்கும் விதமாக தனது ட்விட்டரில் பட்டா புகைப்படத்தை பகிர்ந்த திமுக தலைவர் முக ஸ்டாலின் அது வழிவழியாக தனியாருக்கு சொந்தமானது என்றும், ராமதாஸ் பச்சையாக புளுகுகிறார் என்றும் பதிவிட்டார். மேலும் ‘முரசொலி அலுவலகம் இருப்பது பஞ்சமி நிலம் என நிரூபிக்க தவரும் பட்சத்தில் ராமதாஸ் அரசியலில் இருந்து விலக தயாரா?” என சவால் விட்டார் ஸ்டாலின்.
அதற்கு எதிர்வினையாற்றிய ராமதாஸ் “1985ம் ஆண்டு பட்டாவை காட்டியிருக்கிறீர்கள். மூல பத்திரத்தை காட்டுங்கள்” என கூறியுள்ளார். மேலும் முரசொலி அலவலகம் இருக்கும் இடத்தில் முன்னதாக ஆதிதிராவிடர் நல விடுதி இருந்ததாகவும் அதை ஆக்கிரமித்து திமுக முரசொலி கட்டிடத்தை கட்டியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இரு கட்சி தலைவர்களிடையே நடைபெறும் இந்த வாக்குவாதம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.