செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : சனி, 19 அக்டோபர் 2019 (18:46 IST)

பதவி விலக நான் ரெடி நீங்க ரெடியா! – ராமதாஸுக்கு அறைக்கூவல் விடுக்கும் ஸ்டாலின்

மூல பத்திரத்தை காட்ட நான் தயார். அரசியலை விட்டு விலக நீங்கள் தயாரா என பாமக நிறுவனர் ராமதாஸுக்கு அறைக்கூவல் விடுத்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தை அபகரித்து கட்டப்பட்டதென பாமக தலைவர் ராமதாஸ் குற்றம் சாட்டினார். அதற்கு பதிலளித்த மு.க ஸ்டாலின் பட்டா புகைப்படத்தை அனுப்பி “இது தனியாரிடமிருந்து வாங்கப்பட்டது. பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டது என்று நிரூபிக்காவிட்டால் அரசியலில் இருந்து விலகிவிடுகிறீர்களா?” என அறைக்கூவல் விடுத்தார்.

ஆனால் அதை பொருட்படுத்தாத ராமதாஸ் ”பட்டாவை மட்டும்தானே காண்பித்தீர்கள்! மூல பத்திரத்தை காட்டுங்கள்” என கேட்டார். தற்போது அதற்கு பதிலளித்த ஸ்டாலின் “நான் விடுத்த அறைக்கூவலை ஏற்று கொள்ள தயாரா? அப்படி ஏற்று கொண்டீர்கள் என்றால் மூல பத்திரம் முதல் நீங்கள் கேட்கும் அனைத்து ஆவணங்களையும் காட்ட தாயார்” என மீண்டும் சவாலுக்கு அழைத்துள்ளார். “முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் உள்ளது என்று நீங்கள் நிரூபித்து விட்டால் நான் அரசியலை விட்டு விலகி விடுகிறேன். அப்படி உங்களால் நிரூபிக்க முடியாவிட்டால் நீங்களும், உங்கள் மகனும் அரசியலிலிருந்து வெளியேற தயாரா?” என வெளிப்படையாக சவால் விடுத்துள்ளார் ஸ்டாலின்.

இதற்கு ராமதாஸ் இன்னும் பதிலளிக்காத நிலையில் இந்த மோதல் உச்சக்கட்டம் எடுத்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.