1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 21 மே 2024 (10:46 IST)

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க இடைஞ்சல்! கணவனுக்கு ஸ்கெட்ச் போட்ட மனைவி! திரைப்படத்தை மிஞ்சம் நிஜக்கதை!

மதுரையில் கள்ளக்காதலுக்கு இடைஞ்சலாக இருந்த கணவனை கூலிப்படை ஏவி கொலை செய்ய முயன்ற மனைவி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



மதுரை மஞ்சம்பட்டியை சேர்ந்த ரமேஷ் என்பவர் அபுதாபியில் எலெக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது சொந்த ஊரில் கோழிப்பண்ணை ஒன்றை வைத்துள்ளார். அந்த கோழிப்பண்ணையை பார்த்துக் கொள்ளும் வேலையை பாரிச்சாமி என்பவர் செய்து வந்துள்ளார். பாரிச்சாமிக்கு பரிமளா என்ற மனைவியும், 3 மகள்கள், ஒரு மகனும் உள்ளனர்.

அபுதாபியில் உள்ள ரமேஷ் ஊருக்கு வரும்போது தனது கோழிப்பண்ணயை பார்க்க அடிக்கடி வருவார். அப்படி வரும்போது ரமேஷுக்கும், பாரிச்சாமியின் மனைவி பரிமளாவிற்கும் இடையே பழக்கம் உண்டாகியுள்ளது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறிய நிலையில் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த விஷயம் பாரிச்சாமிக்கு தெரிய வந்த நிலையில் மனைவியை கண்டித்துள்ளார்.

சில நாட்களில் ரமேஷ் திரும்ப அபுதாபி சென்றுவிட்ட நிலையில் பாரிச்சாமி அந்த கோழிப்பண்ணையில் வேலை செய்வதை நிறுத்தினார். பின்னர் திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அருகே உள்ள பெரியப்பட்டியில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் வேலைக்கு சேர்ந்தவர் குடும்பத்தையும் அங்கே அழைத்து சென்று விட்டார்.

தங்களை மதுரையை விட்டு தனது கணவர் அழைத்து சென்றுவிட்டதை தனது கள்ளக்காதலன் ரமேஷிடம் சொன்ன பரிமளா, தனது கணவர் இருவரையும் சேர விடமாட்டார், அவரை தீர்த்துக்கட்டி விடலாம் என ரமேஷுடன் சேர்ந்து திட்டம் போட்டுள்ளார். ரமேஷும் அதற்கு இணங்கி உள்ளூர் கூலிப்படையை வைத்துக் கொலை செய்யுமாறும், பணத்தை தான் அனுப்பி வைப்பதாகவும் கூறி முதலில் ரூ.20 ஆயிரம் அனுப்பியுள்ளார்.

அதை வைத்து பரிமளம் தனக்கு தெரிந்த குமார் என்பவரிடம் தனது கணவரை தீர்த்துக்கட்ட டீல் பேசியுள்ளார். குமார் ஒன்றரை லட்சம் கொடுத்தால் கணவரை தீர்த்துக்கட்டுவதாக கூறியுள்ளார். பரிமளம் ஒப்புக் கொண்ட நிலையில், கடந்த 12ம் தேதி இரவு நேரத்தில் ஒரு 7 பேர் கொண்ட கும்பல் பெரியப்பட்டி கோழிப் பண்ணைக்குள் நுழைந்துள்ளனர். பாரிச்சாமி அவர்களை விசாரித்தபோது முயல்வேட்டைக்கு வந்ததாகவும், மழை பெய்வதால் அங்கு ஒதுங்கியதாகவும் கூறியுள்ளனர்.

crime


அவர்கள் சொல்லியதை நம்பிய பாரிச்சாமி அவர்கள் அங்கு நிற்க அனுமதித்து விட்டு தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மின்சாரத்தை நிறுத்திய கூலிப்படை கும்பல் பாரிச்சாமியை அரிவாள், கத்தியால் தாக்க தொடங்கியுள்ளனர். தனது திட்டம் நிறைவேறிய மகிழ்ச்சியில் பரிமளா இருந்தபோது, பாரிச்சாமி அலறும் சத்தம் கேட்ட குழந்தைகள் கோழிப்பண்ணைக்கு ஓடியதால் திட்டத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் குறுக்கே புகுந்ததால் குழந்தைகள் மேல் வெட்டு விழுந்துவிடும் என்பதால் பாரிச்சாமியை குற்றுயிராக விட்டுவிட்டு அந்த கும்பல் தப்பி ஓடியுள்ளது. பிள்ளைகள் அலறலை கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக விரைந்து பாரிச்சாமியை மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரும் உயிர்பிழைத்துள்ளார்.

கணவன் தப்பித்துவிட்டதை பொறுத்துக் கொள்ள முடியாத பரிமளா, இறுதியாக பாரிச்சாமியிடம் உண்மையை சொல்லி மிரட்டியுள்ளார். ‘எங்கள் கள்ள உறவுக்கு குறுக்கே வந்தால் உன்னை கொன்றுவிடுவேன். உன்னை கொல்ல வந்தது நான் அனுப்பிய ஆட்கள்தான்’ என மிரட்டியுள்ளார். இதை பாரிச்சாமி தன்னை பார்க்க வந்த தனது தாயாரிடம் சொல்லியுள்ளார். பாரிச்சாமியின் தாயார் உறவினர்கள் இதுகுறித்து போலீஸில் புகார் அளித்துள்ளனர்.


அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் தனிப்படை அமைத்து கூலிப்படை கும்பலை தேடி வந்த நிலையில் கொலை முயற்சியில் முக்கிய புள்ளியான குமார் மற்றும் 17 வயது சிறுவன் சிக்கியுள்ளனர். பரிமளாவையும் போலீஸார் கைது செய்துள்ளனர். தலைமறைவான 5 பேரையும் தேடி வருகின்றனர். குமாரிடம் நடத்திய விசாரணையில் பாரிச்சாமியை தாக்கிவிட்டு ஓடிய அவர்கள் அபுதாபி ரமேஷிடம் கொலை செய்துவிட்டதாக கூறி ரூ.1 லட்சம் பணம் பெற்றதும் தெரியவந்துள்ளது. அபுதாபி ரமேசும் இதில் முக்கிய புள்ளி என்பதால் அவரை பிடிப்பது குறித்தும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Edit by Prasanth.K