ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 16 பிப்ரவரி 2024 (15:46 IST)

ராத்திரி நேரத்தில் இளைஞரை கும்பலாக தாக்கிய காவலர்கள்! சர்ச்சையான வீடியோ! – நடந்தது என்ன?

Police
தென்காசியில் பேருந்து நிலையத்தில் இரவில் இளைஞர் ஒருவரை போலீஸார் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


 
தென்காசி மாவட்டம், தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவலர்கள், இளைஞர் ஒருவரை சரமாரியாக தாக்குவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து இது தொடர்பாக தென்காசி போலீசார் இரவு ரோந்து பணியில் இருந்த காவலர்களை விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், காவலர்கள் தாக்கிய நபர் தென்காசி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த அபி என்பதும், இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், நேற்று மாலை போலீசார் வழக்கமான வாகன சோதனை ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அதிக மது போதையில் வாகனத்தை இயக்கி வந்த அபியை மறித்து போலீசார் சோதனை செய்துள்ளனர்.

அப்போது, அவர் அளவுக்கு அதிகமான மது போதை இருந்த காரணத்தினால் அவருக்கு மது போதையில் வாகனம் இயக்கிய குற்றத்திற்காக அபராதம் விதித்ததோடு மட்டுமல்லாமல் அவரது வாகனத்தை பறிமுதல் செய்து சார்பு ஆய்வாளர் கருப்பசாமி என்பவர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

இந்த நிலையில், போலீசார் தனது வாகனத்தை பறிமுதல் செய்து விட்டார்கள் என்ற கோபத்தில் இருந்த அபி இரவு ரோந்து பணியில்  தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த காவலர்களை தர குறைவாக பேசி அடிக்க சென்றதாக கூறப்படுகிறது.

இதனால், ஆவேசம் அடைந்த காவலர்கள் அபியை தாக்கியதாக கூறப்படுகிறது. குறிப்பாக, மது போதையில் சென்ற இளைஞரின் வாகனத்தை பறிமுதல் செய்த காவலர்களை தர குறைவாக பேசியதால் இளைஞர் ஒருவர் போலீசாரால் தாக்கப்படும் சம்பவம் குறித்தான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது தொடர்பாக காவல்துறை உயரதிகாரிகள் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்: யாசர்