வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Modified: வியாழன், 21 டிசம்பர் 2023 (15:50 IST)

திட்டுபவர் திட்டட்டும் அரசு தன் கடமையை சிறப்பாக செய்கிறது! - நடிகர் வடிவேலு புகழாரம்!

தமிழக அரசு தனது பணியை சிறப்பாக செய்து வருவதாக நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.


 
பசுமை சைதை திட்டத்தின் கீழ் மிக்ஜாம் புயலின் தாக்கத்தினால் வீழ்ந்த மரங்களை ஈடு செய்யும் வகையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களின் ஏற்பாட்டில் சைதாப்பேட்டை தொகுயில் 5000 மரங்களை நடும் நிகழ்வு சைதாப்பேட்டை தாடண்டர் நகரிலுள்ள மைதானத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக  நடிகர் வடிவேலு கலந்து கொண்டு மரத்தினை நட்டு துவக்கி வைத்தார். தொடர்ந்து மேடையில் பேசிய அவர்,  தமிழ்நாடு அரசு பல சோதனைகளை சந்திக்கிறது எனவும் சென்னையில் புயலை அரசியலாக்கிவிட்டார்கள் எனவும் தெரிவித்தார்.

ஆனால் தென்மாவட்ட மழையில் அவ்வாறு செய்ய இயலவில்லை என குறிப்பிட்ட அவர்,  இயக்குனர் மாரிசெல்வராஜ் ஏன் அங்கு செல்கிறார் என சிலர் கேட்கிறார்கள். அது அவருடைய ஊர் அவர் செல்லாமல் எப்படி இருப்பார் என்று வடிவேலு கேள்வி எழுப்பினார். மழை பெய்துக்கொண்டிருக்கும் போது தமிழக அரசு சிறப்பான பணிகளை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் வடிவேலு, உலகமே நம்மை பாராட்டினாலும் நம்மை திட்டுவதற்கு நான்கு பேர் இருப்பார்கள் அதுபோலத்தான் இதுவும் திட்டுபவர்கள் திட்டிக் கொண்டே இருக்கட்டும் அரசாங்கம் தன் கடமையை சிறப்பாக செய்யும் என குறிப்பிட்டார்.