''லியோ'' பட '' நா ரெடி பாடலுக்கு சிக்கல்?...சமூக ஆர்வலரின் கேள்விக்கு தணிக்கை குழு பதில்
விஜய்யின் லியோ படத்தின் முதல் சிங்கில் நா ரெடிதான் வரவா என்ற பாடல் படத்தில் இடம்பெறாது என தகவல் வெளியாகும் நிலையில் சமூக ஆர்வலரின் கேள்விக்கு தணிக்கைக் குழு பதில் அளித்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார்.சமீபத்தில் இப்படத்தின் முதல் சிங்கில் ''நா ரெடி'' என்ற பாடல் வெளியானது.
அனிருத் இசையமைப்பில் உருவான இப்பாடலை விஜய் பாடியிருந்தார். இப்பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
ஆனால், இப்பாடல் காட்சியிலும், போஸ்டரிலும் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிக்கு விமர்சனம் வலுத்தது. சமூக ஆர்வலர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இளைஞர்களை மதுகுடிக்கவும், புகைப்பிடிக்கவும் தூண்டுவதா என்று நடிகர் விஜய்க்கு சமூக ஆர்வலர்கள் பலரும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்தனர்.
இந்த நிலையில், சென்னை கொருக்குப்பேட்டை பகுதியை சமூக ஆர்வலர் ஆர்.டி.ஐ செல்வம் '' லியோ பட முதல் சிங்கில் நா ரெடி பாடல் இளைஞர்களை போதைப் பழக்கத்தை தூண்டும் வகையிலும் ரவுடியிசத்தை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதால் விஜய் மற்றும் படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று'' சென்னை காவல் ஆணையருக்கு புகார் மனு ஒன்றை இணைய வாயிலாக அனுப்பியிருந்தார்.
இந்த நிலையில், சென்சார் சான்றிதழ் குறித்த தகவலைப் பற்றி அறிந்து கொள்ள மத்திய தணிக்கை குழை ஆர்.டி.ஐ செல்வம் அணுகியுள்ளார்.
இதற்குப் பதில் அளித்துள்ள மத்திய தணிக்கைக்குழு, நா ரெடி பாடலின் பொது வெளிட்யீட்டிற்கு இதுவரை யு, ஏ, யு/ஏ என எந்த சான்றிதழும் வழங்கப்படவில்லை ; சமூக வலைதளங்களில் வெளியான இப்பாடல் திரைத்துறை தணிக்கை சட்டத்தின் கீழ் வராது என்று கூறியுள்ளது.
இதையடுத்து, அனுமதி பெறாமல் ரிலீஸாகியுள்ள நா ரெடி பாடலை நீக்கும்படி நீதிமன்றத்தை நாடப்போவதாகவும், வரும் திங்கட்கிழமை அவர் நீதிமன்றத்தில் மனு அளிக்கவுள்ளதாக முடிவு செய்துள்ளதாக செல்வம் கூறியுள்ளார்.