வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 21 ஜனவரி 2022 (08:48 IST)

மதம் மாற்றும் முயற்சியால் மாணவி தற்கொலையா? – போலீஸ் விசாரணை!

தஞ்சையில் 12ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கு மத மாற வற்புறுத்தியது காரணமா என்று போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் வடுகர்பாளையத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் லாவண்யா பூதலூரில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி 12ம் வகுப்பு படித்து வருகிறார். சமீபத்தில் விடுதியில் உள்ள லாவண்யா உடல்நலமின்றி இருப்பதாக விடுதி நிர்வாகம் முருகானந்தத்திற்கு போன் செய்து வந்து அழைத்து செல்லுமாறு கூறியுள்ளனர்.

முருகானந்தம் லாவண்யாவை சொந்த ஊருக்கு அழைத்து சென்று மருத்துவமனையில் அனுமதித்தபோது அவர் விஷம் அருந்தியிருந்தது தெரிய வந்துள்ளது. உடனடியாக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்ட நிலையில் முருகானந்தம் இதுகுறித்து போலீஸில் புகார் அளித்தார்.

இந்நிலையில் மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதை தொடர்ந்து மாணவியை மதமாற்றம் செய்ய பள்ளி நிர்வாகம் முயற்சித்ததுதான் மாணவி தற்கொலைக்கு காரணம் என கூறி பாஜகவினர் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுதொடர்பாக விளக்கம் அளித்த போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா, மாணவியிடம் பெறப்பட்ட வாக்குமூலத்திலும், அவரது பெற்றோர் அளித்த முதல் புகாரிலும் மதமாற்றம் குறித்து தெரிவிக்கவில்லை. தற்போது இரண்டாவதாக அளிக்கப்பட்டுள்ள புகாரில் அதுகுறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.