தஞ்சை தேர் விபத்து எதிரொலி; தேர் வலத்திற்கு புதிய கட்டுப்பாடுகள்? – இன்று கவன ஈர்ப்பு தீர்மானம்!
தஞ்சாவூர் தேர் ஊர்வலத்தில் ஏற்பட்ட மின் விபத்தால் பலர் உயிரிழந்துள்ள நிலையில் இதுகுறித்து இன்று சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் நடைபெற உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் உள்ள அப்பர் கோவிலில் 94வது ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு தேர்வலம் விமரிசையாக நடைபெற்றது.
இந்நிலையில் தேர் நகர்வலம் முடிந்து கோவிலை நெருங்கியபோது உயர் மின் அழுத்த கம்பியில் உரசியது. இதனால் தேரினுள் நின்ற 10 பேர் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டதால் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், இறந்தவர்கள் குடும்பங்களுக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.5 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். மேலும் இன்று காலை 11.30 மணியளவில் தனிவிமானத்தில் தஞ்சாவூர் செல்கிறார்.
இந்நிலையில் தஞ்சை தேர் விபத்து குறித்து தமிழக சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாக திருவையாறு எம்.எல்.ஏ சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். மேலும் இதுபோன்ற விபத்துகள் தொடராமல் இருக்க தேர் ஊர்வலங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.