திமுகவுக்கு அமித்ஷா ரிங் மாஸ்டர்: தம்பிதுரை பேட்டி!
சிபிஐ இயக்குனர் இரவோடு இரவாக மாற்றப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், காங்கிரஸ் மற்றும் திமுக இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சிபிஐ இயக்குனர் மாற்றத்தில் அரசின் முடிவு ஏதுமில்லை என நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பதில் அளித்துள்ளார்.
இந்நிலையில், அதிமுக மூத்த தலைவரும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை, திமுக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து சிபிஐ மூலம் ஏதாவது செய்யவேண்டும் என்கிற நிலையை ஏற்படுத்துகிறது என குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து தம்பிதுரை பேசியது பின்வருமாறு, சிபிஐ எந்த அளவுக்கு திமுகவுக்கு ஆதரவாக உள்ளது என்பதை குறிப்பிட விரும்புகிறேன். தற்போது எங்கள் அமைச்சர்கள் மீது சிபிஐ வழக்கு போட்டு முதல்வர் ராஜினாமா செய்யவேண்டும், அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்யவேண்டும், டிஜிபி ராஜினாமா செய்யவேண்டும் என்று சொல்வது நடக்கிறது.
சிபிஐயின் அவல நிலையை திமுகவினர் புரிந்துகொள்ள வேண்டும். திமுகவுக்கு அமித்ஷா ரிங் மாஸ்டராக உள்ளார். சிபிஐ-யை வைத்துக்கொண்டு அதிமுகவை அன்றைய காங்கிரஸ் அரசு பழிவாங்கியது, தற்போது திமுக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து ஏதாவது செய்யவேண்டும் என்கிற நிலையை ஏற்படுத்துகிறது என தெரிவித்துள்ளார்.