1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 9 அக்டோபர் 2024 (13:02 IST)

சாம்சங் தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள்.. நள்ளிரவில் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு..!

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில் உள்ள சாம்சங் தொழிலாளர்கள் கடந்த நான்கு வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் முக்கிய கோரிக்கைகள் நிர்வாகத்துடன் உரிய பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானிக்கப்படவில்லை என்பதால், தொழிலாளர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.

முதல்வர் மு.க. ஸ்டாலின், தொழிலாளர்களின் கோரிக்கைகளை கண்டறிய அமைச்சர்கள் டி.ஆர்.பி. ராஜா, தா.மோ. அன்பரசன் மற்றும் சி.வி. கணேசனை அடங்கிய குழுவை அமைத்துள்ளார். இந்த குழுவின் பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கம் அமைப்பது தவிர்ந்த பிற கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் தொழிலாளர் சங்கம், தொழிற்சங்க அங்கீகாரம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என முடிவு செய்தது.

இந்நிலையில், போராட்டத்திற்கு திமுக கூட்டணிக் கட்சிகள், காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சிகள் தங்களின் முழு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன. செல்வப்பெருந்தகை, திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன் மற்றும் வேல்முருகன் போன்றவர்கள் இன்று நேரில் சாம்சங் தொழிலாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளை சந்திக்க இருந்தனர்.

ஆனால், நேற்று நள்ளிரவில்  காவல்துறையினர் தொழிற்சங்க நிர்வாகிகள் வீட்டில் புகுந்து அவர்களை கைது செய்தனர். இதனை கண்டித்து, மதுரை எம்பி சு. வெங்கடேசன், தொழிலாளர்கள் மீதான போலீசின் நடவடிக்கை முறை தவறானது என கூறியுள்ளார். மேலும், சாம்சங் தொழிலாளர்கள் அமைத்த போராட்ட பந்தல்கள் அகற்றப்பட்டதுடன், காவல்துறையினர் அங்கு அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில், தொழிற்சங்க நிர்வாகிகளை கைது செய்ததை எதிர்த்து, சிஐடியு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Edited by Siva