வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: புதன், 9 அக்டோபர் 2024 (12:45 IST)

ரயில் நிலையத்தில் முதலாம் நடைமேடையில் 100 அடி நீளத்திற்கு இடிந்து விழுந்த கட்டுமான பணி- அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்!

மயிலாடுதுறை ரயில்வே நிலையத்தில் பிரதமரின் சிறப்பு திட்டமான அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீனப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் முதலாம் நடைமேடைக்கு அருகில் பெரிய அளவில் நடை பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது இதற்காக முதலாம் நடைமேடை அருகில் மிகப்பெரிய பள்ளம் தோண்டி கட்டப்பட்டுள்ளன.
 
இந்நிலையில் ரயில்வே தபால் நிலையத்திற்கும் நிலைய மேலாளர் அலுவலகத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் 100 அடி நீளத்திற்கு ஒன்றாவது நடைமேடை நேற்று நள்ளிரவு 12.45 மணிக்கு திடீரென்று சரிந்து கீழே விழுந்தது இதில் நடைமேடையில் பயணிகள் அமரும் மூன்று இருக்கைகள் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகள் இடுப்பாடுகளுக்குள் சிக்கிக்கொண்டன.
 
நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் செல்லும் அந்தோதயா ரயில் முதலாம் நடை மேடையை விட்டு கிளம்பிச் சென்ற சில நொடிகளில் இந்த விபத்து நடந்துள்ளது. 
 
பயணிகள் இருக்கையில் அமர்ந்திருந்தவர்கள் ரயிலுக்கு எழுந்து சென்ற சில நிமிடங்களில் விபத்து நடந்தது.
 
இதனால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
 
மழை காரணமாக பாலத்திற்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் தண்ணீர் தேங்கியதால் நடைமேடை இடிந்து விழுந்ததாக தெரிய வருகிறது மேலும் அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.