தமிழக கோவில்களில் விஐபி தரிசனம் ரத்து? – அமைச்சர் சேகர்பாபு!
தமிழகத்தின் முக்கியமான கோவில்களில் விரைவாக தரிசனம் செய்யும் விஐபி முறையை மெல்ல ரத்து செய்ய உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள பல பெரிய கோவில்கள் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றன. இந்த கோவில்களில் முக்கியமான கோவில்கள் பலவற்றில் பொதுமக்கள் சாதாரணமாக சென்று தரிசிக்க இலவச வரிசையும், பெரும் க்யூவில் காத்திராமல் கட்டணம் செலுத்தி முன்னதாக சென்று கருவறை அருகே நின்று தரிசனம் செய்யும் சிறப்பு விஐபி தரிசன முறையும் நடைமுறையில் உள்ளன.
இந்நிலையில் சமீபத்தில் திருத்தணி மற்றும் திருச்செந்தூரில் முக்கியமான விழாக்களின்போது விஐபி தரிசனம் நிறுத்தப்பட்டது. அதுபோல நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலிலும் தரிசனத்திற்கு ரூ.20 கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இவற்றை சுட்டிக்காட்டி பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழகத்தின் முக்கிய கோவில்களில் மெல்ல விஐபி தரிசன முறை ரத்து செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
Edit By Prasanth.K