1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified வியாழன், 9 ஜூன் 2022 (09:03 IST)

காவி vs கழகம்: தமிழகத்தில் யார் மிரட்டலுக்கு யார் அஞ்சுவார்??

தமிழகத்தில் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு விவகாரம் தொடர்பாக காரசார பேச்சுக்களும் மிரட்டல்களும் பாஜக தரப்பில் இருந்து வந்துள்ளது. 

 
மதுரை ஆதீனம் vs அமைச்சர் சேகர் பாபு: 
 
சமீபத்தில் மதுரை ஆதீனம் தனது பேட்டியில், அரசியல் வாதிகளுக்கு கோவிலில் என்ன வேலை? இலங்கையில் ராஜபக்சே கோவிலை இடித்தான் கெட்டான். அது போல் இங்கும் கோவிலை இடித்தவர்கள் கெட்டார்கள் என பேசியிருந்தார். 
 
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமான அமைச்சர் சேகர் பாபு, முதல்வரின் வழிகாட்டுதலின் படி மிகவும் அடக்கி வாசித்து கொண்டிருக்கின்றோம். நாங்களும் எவ்வி அடிக்க முடியும். அது நன்றாக இருக்காது. மதுரை ஆதீனம் தொடர்ந்து அரசியல்வாதியைப் போல் பேசிக்கொண்டிருப்பதை இந்து சமய அறநிலையத்துறை அனுமதிக்காது என கூறியிருந்தார். 
அண்ணாமலை எச்சரிக்கை:
 
அமைச்சர் சேகர் பாபு பேசிய செய்தி வெளியானதை அடுத்து அமைச்சர் சேகர்பாபுவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில், புது காஸ்டியூம் போட்டுள்ளார் அமைச்சர் சேகர் பாபு. மீண்டும் காவி வேட்டி கட்டத் துவங்கியுள்ளார். மதுரை ஆதீனத்தை அமைச்சர் சேகர்பாபு தொடர்ந்து மிரட்டி வருகிறார். ஆதீனத்தின் மேல் மட்டும் நீங்கள் கையை வைத்து பாருங்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
எச்.ராஜா கண்டனம்: 
 
இதே போல எச் ராஜாவும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். மதுரை ஆதீனம் அல்ல, காவி துண்டு அணிந்த ஒரு நபரைக்கூட திமுகவினர் எதுவும் செய்து விட முடியாது. மேலும் மதுரை ஆதீனம் விவகாரத்தில் பேசிய அமைச்சர் சேகர் பாபு, முதலமைச்சர் ஸ்டாலின் தங்களை அடக்கி வைத்திருப்பதாக பேசியிருக்கிறார். இது சரியல்ல. சேகர் பாபு அவரது அடாவடி செயலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என எச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.