செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 18 மார்ச் 2022 (12:46 IST)

மத்திய அரசு தரல.. ரேடார் வாங்கும் தமிழக அரசு! – இதுவே முதல்முறை!

சென்னை வானிலை ஆய்வு மண்டலத்தை  தரம் உயர்த்த தேவையான உபகரணங்களை வாங்க தமிழக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் 2022-23ம் ஆண்டிற்கான ஆண்டு பட்ஜெட் இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராகன் பட்ஜெட் உரையை வாசித்தார்.

கல்வி, விவசாயம், சுகாதாரம், மருத்துவம் என பல துறைகளுக்கும் நிதி ஒதுக்கியும், பல புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கியும் பட்ஜெட் உரை இருந்தது. கடந்த சில மாதங்கள் முன்னதாக சென்னையில் முன்னறிவிப்பில்லாமல் திடீர் கனமழை பெய்ததால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

நவீன உபகரணங்கள் இல்லாததால் திடீர் வானிலை மாற்றத்தை கணிக்க இயலவில்லை என வானிலை ஆய்வு மண்டலம் தெரிவித்திருந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மண்டலத்தில் நவீன கருவிகள் அமைத்து நவீனப்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.

ஆனால் தற்போது தமிழக அரசே வானிலை மையுத்தை நவீனப்படுத்த தேவையான சூப்பர் கம்ப்யூட்டர்கள், ரேடார், மழைமானிகள், தானியங்கி நீர்மட்ட கருவிகள் உள்ளிட்டவற்றை வாங்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. வானிலை ஆய்வு மைய கருவிகள் வாங்க மாநில பட்ஜெட்டில் நிதி ஒதுக்குவது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.