பான் மசாலா விளம்பரத்தில் நடித்தது தொடர்பாக ஷாருக்கான், அஜய்தேவ்கன் ஆகிய பாலிவுட் நடிகர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
வடமாநிலங்களில் பான் மசாலா பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் அந்த பொருட்களின் விளம்பரத்தில் பெரிய பெரிய பாலிவுட் நடிகர்கள் நடிக்கின்றனர். ஆனால் பான் மசாலா சாப்பிடுவதால் புற்றுநோய் உள்ளிட்ட பல ஆபத்துகள் உள்ளதாக எச்சரிக்கப்படுகிறது, தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் பான் மசாலா, குட்கா பொருட்களுக்கு தடை உள்ளது.
இந்நிலையில் இந்தியில் பிரபலமான நடிகர்களான ஷாருக்கான், அஜய்தேவ்கன் உள்ளிட்டோர் ஜேபி இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் விமல் பான் மசாலா விளம்பரத்தில் நடித்திருந்தனர். நாக்கில் குங்குமப்பூ என வரும் அந்த விளம்பரத்தை டிவியில் கிரிக்கெட் ஒளிபரப்புக்கு நடுவே பலரும் பார்த்திருக்கக் கூடும்
அந்த விளம்பரத்தில் பான் மசாலாவின் ஒவ்வொரு துகளும் குங்குமப்பூவின் சக்தியை கொண்டுள்ளது என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது, இதன்மூலம் குங்குமப்பூ தடவிய குட்கா என்ற பெயரில் அந்த பான் மசாலாவை வாங்க மக்கள் ஈர்க்கப்படுவதாகவும், ஆனால் அது அபாயகரமான நோய்களை வரவழைக்கிறது என்றும், ராஜஸ்தான் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
இதுத்தொடர்பாக விளக்கம் அளிக்க விளம்பரத்தில் நடித்த ஷாரூக்கான், அஜய்தேவ்கனுக்கும், விமல் பான் மசாலா நிறுவனத்திற்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K