1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: வெள்ளி, 1 நவம்பர் 2019 (10:13 IST)

இன்று ”தமிழ்நாடு நாள்” கொண்டாட்டம்..

தமிழ்நாடு தனி மாநிலமாக உருவாக்கப்பட்ட வரலாற்றை நினைவு கூறும் வகையில் இன்று முதல் முதலாக “தமிழ்நாடு நாள்’ கொண்டாடப்படுகிறது.

பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் போது, அதாவது 1600களின் போது, இன்றைய தமிழகம், கேரளா, (திருவிதாங்கூர் சமஸ்தானம் தவிர்த்து), ஆந்திராவின் சில பகுதிகள், ஒடிசாவின் தென் பகுதிகள் ஆகியவை மெட்ராஸ் மாகாணம் என்று அழைக்கப்பட்டது. மேலும் 1798 வரை வரை இப்போதைய இலங்கை தீவும் மெட்ராஸ் மாகாணத்திற்குள் தான் அடங்கின என கூறப்படுகிறது.

1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என பல கோரிக்கைகள் எழுந்தது. இதனை தொடர்ந்து 1950 வாக்கில் இந்தியாவில் உள்ள அனைத்து மாகாணங்களையும் மொழி வாரி மாநிலங்களாக பிரிக்கப்பட வேண்டும் என பல குரல்கள் எழுந்தன. இந்த கோரிக்கைகளை தொடர்ந்து மாநிலங்கள் மறுஉருவாக்க சட்டம், 1956 அமல்படுத்தப்பட்டது.

இதன் படி மொழி வாரியாக பல மாகாணங்கள் பிரிக்கப்பட்டது. அதே போல் நவம்பர் 1, 1956 ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாணத்திலிருந்து மெட்ராஸ் மாநிலம் தனியாக உருவாக்கப்பட்டது. இதனை நினைவுபடுத்த தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட வேண்டும் என தமிழ் அமைப்புகள் பல கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று தற்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மெட்ராஸ் மாநிலம் உருவாக்கப்பட்ட நாளான நவம்பர் ஒன்றை “தமிழ்நாடு நாள்” என அறிவித்தார்.

எனினும், ஜனவரி 14, 1969 ஆம் ஆண்டு சி.என்.அண்ணாதுரை முதல்வராக இருந்தபோது, மெட்ராஸ் மாநிலம் தமிழ்நாடு என பெயர் மாற்றப்பட்டது. ஆதலால் அந்த நாளை தான் ”தமிழ்நாடு நாள்” என அறிவிக்கவேண்டும் என சிலர் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.