ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 28 பிப்ரவரி 2024 (16:39 IST)

தமிழ்நாடு தண்ணீர் இன்றி பாலைவனமாக மாறும் அவல நிலை- சசிகலா

தமிழ்நாடு தண்ணீர் இன்றி பாலைவனமாக மாறும் அவல நிலைக்கு கொண்டு செல்லும் திமுக தலைமையிலான அரசுக்கு எனது கடும் கண்டனம் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

''விவசாயம் அழித்து மக்களை குடிக்க நீர் இன்றி செத்து மடியும் நிலைக்கு தள்ளியதைதான் திமுக தலைமையிலான அரசின் ஒப்பற்ற சாதனையாக இன்றைக்கு பார்க்க முடிகிறது. நமது நாட்டை சுற்றி சீனா, பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகள் நம்மை ஆட்கொள்ள துடிக்கிறார்கள். ஆனால் உள்நாட்டிலேயே தண்ணீர் தர மறுத்து நமது மாநிலத்தை அழிக்க நமது அண்டை மாநிலத்தவர்கள் முயல்வது பெரும் வேதனையாக உள்ளது. ஆட்சி அதிகாரத்தை மட்டும் மனதில் இறுக பிடித்துக்கொண்டுள்ள இந்த விளம்பர திமுக அரசு விவசாயிகளைப் பற்றியோ, மக்களின் குடிநீர் ஆதாரத்தைப் பற்றியோ எந்தவித கவலையும் இல்லாமல் சுயநலப்போக்கோடு செயல்பட்டு வருவது மிகவும் கண்டனத்திற்குரியது. 

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசின் ஆட்சிக்காலம் முடிவதற்குள் கர்நாடகா அரசு எப்படியாவது காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கட்டி விடலாம் என கடுமையாக முயன்று வருகிறது. ஆனால் அவர்களின் எண்ணம் என்றைக்கும் ஈடேறாது. ஏற்கனவே , கர்நாடகா அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய காவிரி நீரை உரிய காலத்தில் தர மறுக்கிறது.  இதில், கர்நாடகா அரசின் நீர்வள துறை அமைச்சர் சிவகுமார் அவர்கள் மத்திய நீர்வள துறை அமைச்சரை சந்தித்து மேகதாது அணை கட்டுவது சம்பந்தமாக தொடர்ந்து பேசி வருகிறார். இது 1892-ஆம் ஆண்டு மைசூர் மற்றும் மெட்ராஸ் அரசுகள் போட்ட ஒப்பந்தத்திற்கு முற்றிலும் எதிரானது. இதனை எல்லாம் உணராத திமுக தலைமையிலான அரசு விழாக்கள் எடுப்பதிலும், வெளிநாட்டு முதலீடுகளை கொண்டு வருவதாக கூறிக்கொண்டு இன்ப சுற்றுலா மேற்கொண்டு வருகிறது. மேலும், கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்ட் அரசு முல்லை பெரியாறு குறுக்கே புதிதாக இடுக்கி அருகே மற்றொரு அணை கட்டப்போவதாக மிரட்டி வருகிறது. நமது புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தொடர் சட்டப்போராட்டத்தின் விளைவாகத் தான் இன்றைக்கு முல்லை பெரியாறு அணையில் 142 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்க முடிகிறது. இதனை திமுக தலைமையிலான விளம்பர அரசு மறக்கவும் முடியாது, மறுக்கவும் முடியாது. புதிய அணை முல்லை பெரியாரின் குறுக்கே கட்டப்பட்டால் மதுரை திண்டுக்கல், ராமநாதபுரம் சிவகங்கை மாவட்டங்கள் வறண்ட பாலைவனமாக மாறிவிடும். இந்நிலையில், நமது அண்டை மாநிலமான ஆந்திர அரசு தன் பங்கிற்கு, பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட ரூ.215 கோடி ஒதுக்கி உள்ளது.

ஏற்கனவே, பாலாற்றின் குறுக்கே 22 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. இந்நிலையில் மேலும் ஒரு தடுப்பணையை குப்பம் என்ற பகுதியில் கட்ட ஆந்திர அரசு முயற்சிப்பது பெரும் வேதனை அளிக்கிறது. இந்த தடுப்பணை கட்டப்பட்டால் வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட மக்கள் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.  தமிழக மக்களின் உரிமைகள் பறிபோவதைப் பற்றி சிறிதும் கவலைப் படாமல், நாடாளுமன்ற தேர்தலை மட்டும் மனதில் வைத்து செயல்படும் திமுக தலைமையிலான அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தை வஞ்சிக்க துடிக்கும் அண்டை மாநில ஆளும் கட்சியினர் திமுகவினரின் கூட்டணியில் அங்கம் வகிப்பவர்கள் தான். இருப்பினும், தமிழகத்திற்கு எந்த பயனும் இல்லை. தமிழக மக்களையும், விவசாய பெருங்குடி மக்களையும் காப்பாற்றுவதற்கு, திமுக தலைமையிலான அரசு எந்தவித முயற்சியும் எடுக்காதது மிகவும் வேதனை அளிக்கிறது. இந்நிலை தொடர்ந்தால், தமிழகத்திற்கு நீர் வரும் வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டு, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற தமிழகத்தின் சிறப்புக்கள் வரலாற்று பக்கங்களில் காணாமல் போய்விடும். எனவே தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை காப்பாற்றிட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்க வேண்டும் என திமுக தலைமையிலான அரசைக் கேட்டுக்கொள்கிறேன்''என்று தெரிவித்துள்ளார்.