வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 26 பிப்ரவரி 2024 (21:25 IST)

இலங்கை கடற்படை கைது செய்யும் மீனவர்களை தண்டிக்க புதிய நடைமுறை - தமிழ்நாடு மீனவர்களுக்கு என்ன பிரச்னை?

fisherman boat
அண்மையில், ராமேஸ்வரத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 23 மீனவர்களில் 20 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
 
அவர்களில், இரண்டு பேருக்கு ஆறு மாத சிறை தண்டனையும், ஒரு மீனவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் விதித்து இலங்கை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இலங்கை கடற்படை கைது செய்யும் தமிழ்நாடு மீனவர்களை தண்டிக்க கடைபிடிக்கப்படும் புதிய நடைமுறை இராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இதனால் இந்த ஆண்டு கச்சத்தீவு திருவிழாவைப் புறக்கணித்து பக்தர்களிடம் இருந்து பெற்ற தொகையை மீண்டும் அவர்களிடமே அளிக்க இருப்பதாக மீனவர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் கூறியிருக்கின்றனர்.
 
மறுபுறம் இலங்கை கடற்பரப்பில், இந்திய மீனவர்கள் நுழைவதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், அத்துமீறிய பிரவேசத்தை தடுக்க தண்டனையை அதிகரிக்க வேண்டும் என்று இலங்கை மீனவர்கள் கூறுகின்றனர்.
 
இலங்கை கடல் எல்லைப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடிப்பதாகக் கைது செய்யப்படும் தமிழ்நாட்டின் மீனவர்கள் இரண்டு வார சிறையடைப்புக்கு பின் விடுதலை செய்யப்படுவார்கள். மேலும், சிறைபிடிக்கப்படும் விசைப் படகுகள் அதன் உரிமையாளர் நேரில் சென்று நீதிமன்றத்தில் ஆஜராகினால் படகு விடுவிக்கப்படும். ஆனால், தற்போது அந்த நிலை மாறியிருக்கிறது என்கின்றனர் இந்திய மீனவர்கள்.
 
விசைப்படகை இயக்கும் மீனவருக்கு ஆறு மாதம் சிறையும், இரண்டாவது முறையாக எல்லை தாண்டி மீன் பிடித்த மீனவருக்கு ஓராண்டுச் சிறையும் விதித்து இருப்பதன் மூலம் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
 
“எங்களது முன்னோர்கள் மீன்பிடித்த கச்சத்தீவில் தான் நாங்கள் மீன்பிடிக்கிறோம். இந்தியக் கடல் பகுதிகளிலும் இலங்கை மீனவர்களும் மீன் பிடிக்கிறார்கள்", என்கின்றனர் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள்.
 
பிபிசியிடம் பேசிய இராமேஸ்வரம் விசைப்படகு சங்கத் தலைவர் எமிரேட், "பாஜகவின் 2014ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான ஆட்சி காலத்தில் 135 விசைப்படகுகள் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு அதில் 25 படகுகள் மட்டுமே மீட்கப்பட்டன். மற்றவை இலங்கையிலேயே பயனற்றுப் போயின. அதேபோல் 2019 முதல் தற்போது வரை 15 நாட்டுப் படகுகள் உட்பட 151 படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்திருக்கிறது. ஆனால் அவற்றை மீட்பதற்கான நடவடிக்கை ஏதும் மத்திய அரசு எடுக்கவில்லை. இலங்கை அரசும் பறிமுதல் செய்யப்படும் படகுகளை நாட்டுமையாக்கி வருகிறது,” என்கிறார் .
 
"இது கடலை நம்பித் தொழில் செய்யும் மீனவனின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாகச் சிதைத்து விடும். தமிழ்நாடு அரசு மத்திய அரசுடன் நல்லுறவில் இல்லாததால், மாநில அரசை பழிவாங்குவதற்காக மீனவர்கள் கைது செய்யப்படும் போது மீட்பு நடவடிக்கைகள் எடுக்காமல் மத்திய அரசு தாமதப்படுத்தி எங்களை வஞ்சிக்கிறது." என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
 
2017-ஆம் ஆண்டு கச்சத்தீவு திருவிழா நேரத்தில் ராமேஸ்வரம் மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதால் கச்சத்தீவு திருவிழாவை இராமேஸ்வரம் மீனவர்கள் புறக்கணித்தனர்.
 
அதேபோல் இந்த ஆண்டும் கச்சத்தீவு திருவிழா நெருங்கி வரும் நேரத்தில் இராமேஸ்வரம் மீனவர்களுக்கு சிறை தண்டனை விதித்து இருக்கிறது இலங்கை அரசு.
 
"இது கச்சத்தீவுக்கு இராமேஸ்வரம் மீனவர்கள் வரக்கூடாது என்று மறைமுகமாக தாக்குவது போல இருக்கிறது. இராமேஸ்வரம் மீனவர்கள் கைதைக் கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்தம், கருப்புக்கொடி படகில் ஏந்தி போராட்டம் செய்து வருகிறோம்," என்றார் எமிரேட்.
 
இது தொடர்பாக மத்திய மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சரை மீனவப் பிரதிநிதிகள் சந்தித்து முறையிட்டுள்ளனர்.
 
'படகுகளை அரசுடமையாக்குவது சேமிப்பை அழிக்கும்'
"தமிழக மீனவர்களின் விசைப் படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து நாட்டுடைமையாக்குவது மீனவர்கள் சிறுகசிறுக சேமித்த சேமிப்பை அழிக்கிறது. இது மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும்.
 
இந்திய நாட்டின் பிரதமர் மோதி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இதில் தலையிட்டு நமது மீனவர்களை விடுதலை செய்வதையும், படகுகள் விடுவிக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்", என தனது சமூக வலைதளத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
 
 
இந்திய மீனவர்களின் போராட்டம் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய யாழ் மாவட்ட சங்கங்கள் சம்மேளனத்தின் உபத் தலைவர் அந்தோணி பிள்ளை பிரான்ஸிஸ் ரத்னகுமார், "இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய நான்கு மாவட்டங்களின் கடல் பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறி தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலையை பயன்படுத்தி சிறிய மீன்களையும் அள்ளிச் செல்வதால் கடல் வளங்கள் முழுவதுமாக அழிகிறது" என்றார்.
 
மேலும், "இலங்கை மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக விரித்து வைத்திருக்கும் வலைகளையும் அறுத்து செல்கின்றனர். இது ஏற்கெனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மீனவர்களுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும்" என்றார்.
 
இலங்கை எல்லைக்குள் மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு ஆறு மாத முதல் ஓராண்டு சிறை தண்டனையை இலங்கை அரசு விதிக்கிறது.
 
ஆனால் சிறை தண்டனையை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்று இலங்கை மீனவர்கள் கோரிக்கை வைக்கின்றனர். இலங்கை பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களுக்கு பத்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கினால் மட்டுமே, இந்திய மீனவர்கள் இங்கு வருவது குறையும் என்று இலங்கை மீனவர் தரப்பு கோரிக்கையை முன்வைக்கிறது.
 
இந்திய மீனவர்களின் அத்துமீறிய பிரவேசம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தின் முன்பு இலங்கை மீனவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
 
அப்போது, இந்திய மீனவர்களின் வருகையை தடுக்கும் வகையில், சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என இலங்கை மீனவர்கள் வலியுறுத்தினர்.
 
கச்சத்தீவு தொடர்பாக பேசிய இலங்கை மீனவர்கள், “இந்திய மீனவர்களை விடுதலை செய்ததால் கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்போம் என்று இராமேஸ்வரம் மீனவர்கள் கூறுவது தவறானது. ஒரு தொழிலை சமய வழிப்பாட்டுடன் சேர்த்து நிபந்தனையாக விதிப்பது ஏற்புடையதாக இருக்காது. எனவே, இந்திய மீனவர்கள் கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க வேண்டும், நாங்களும் பங்கேற்போம்", என்றனர்.
 
 
இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசிக்கும் வெளிநாட்டு மீனவர்களுக்கு எதிராக சட்டத்தில் மீண்டும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமா என இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம், பிபிசி தமிழ் வினவியது.
 
இதற்கு பதிலளித்த அமைச்சர், 'வெளிநாட்டு மீனவர்கள் அத்துமீறி நாட்டிற்குள் பிரவேசித்தால், அவர்களுக்கான தண்டனை வழங்கும் சட்டம் ஏற்கனவே இலங்கையில் அமலில் உள்ளது. அந்த சட்டத்தின் இப்போது மாற்றம் கொண்டு வரப்படாது, என்றார்.
 
“2018ம் ஆண்டு அந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. முதல் தடவை பிடிப்பட்டால், பிணையில் விடலாம் என்றும், இரண்டாவது, மூன்றாவது முறை மீண்டும் பிடிபடும் போது அவர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்படும் என்றும் சட்டம் உள்ளது. சட்டவிரோத படகுகள் எல்லாம் அரசுடமையாக்கப்படும் என்று ஏற்கெனவே சட்டம் உள்ளது.
 
இந்திய மீனவர்கள் தொப்புள் கொடி உறவு என்று சொல்கிறார்கள். ஆனால் இலங்கை கடல் வளத்தை அழிக்கின்றனர். கடற்றொழில் உபகரணங்கள் அழிக்கப்படுகின்றது. எங்கள் மீனவர்கள் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்படுகிறது. இது தடுக்கப்பட வேண்டும்." என இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
 
மேலும் இது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முதலமைச்சர்களுடன் கலந்துரையாட முயற்சி எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.