1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 19 பிப்ரவரி 2024 (13:49 IST)

தமிழக பட்ஜெட் 2024-25..! பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு..! புதிய அறிவிப்புகள் வெளியீடு..!

Budget 2024
தமிழ்நாட்டில் சென்னை  உள்பட நான்கு மாவட்டங்களில்  ஒலிம்பிக் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.
 
2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட் சட்டபேரவையில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு  இன்று தாக்கல் செய்தார்.  இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
 
4 ஒலிம்பிக் பயிற்சி மையங்கள்:
 
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு ரூ.440 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னை, திருச்சி, மதுரை, நீலகிரி, ஆகிய நான்கு மாவட்டங்களில் ஒலிம்பிக் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
திருக்கோயில்களைப் புனரமைக்க ரூ.100 கோடி:
 
1000 ஆண்டுகள் பழமையான திருக்கோயில்களைப் புனரமைப்பு செய்ய பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம், திருநீர்மலை கோயில்களில் ரோப் கார் வசதி ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சென்னை மெட்ரோ 2.0 வுக்கு ரூ.12,000 கோடி:
 
சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்டத்துக்கு ரூ.12,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் மதுரை, கோவையில் மெட்ரோ கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
புதிய பேருந்துகள் கொள்முதல்:
 
3,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என்றும் 500 மின் பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு இந்தாண்டே பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. சிற்றுந்து பேருந்து திட்டம் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
 
கடற்கரைகளில் மேம்பாட்டு திட்டங்கள்:
 
மெரினா, தூத்துக்குடி, புதுக்கோட்டை, கடலூர் ஆகிய இடங்களில் உள்ள கடற்கரைகளை தேர்ந்தெடுத்து ரூ.250 கோடி மதிப்பில் மேம்பாட்டு திட்டங்களை அமல்படுத்தி நீள நிற கடற்கரை சான்றுகள் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது
 
தமிழகத்தின் 14 கடலோர மாவட்டங்களில் 1076 கி.மீ. கடற்கரை பகுதிகளை மையமாக கொண்டு நெய்தல் மீட்சி இயக்கம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 
செங்கல்பட்டு அருகே ரூ.343 கோடி மதிப்பில் பல்லுயிர் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டு வருகிறது.
 
தமிழ்நாடு நீர் வளம் மற்றும் தகவல் மையத்தை ரூ. 30 கோடியில் செயல்படுத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
 
குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவில் ராக்கெட் தளம் அமையவுள்ள இடம் அருகே விண்வெளி பூங்கா அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்காக 6 இடங்களில் தடகள விளையாட்டு மையங்கள் அமைக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
 
அரசு மருத்துவமனைகளின் தரம் உயர்த்தப்படும்:
 
அண்ணா புற்றுநோய் மருத்துவமனை சிறந்த மையமாக தரம் உயர்த்தப்படும் என்றும் ஆரம்பகால நோயறிதல் விழிப்புணர்வு, சிகிச்சை ஆகியவற்றை உறுதி செய்வதே இதன் நோக்கம் என்றும் பட்ஜெட் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
தேனி மற்றும் சேலம் மருத்துவக் கல்லூரிகள் உட்பட ஆறு மாவட்டங்களில் 50 படுக்கைகள் கொண்ட குறைந்தது 6 புதிய விபத்து சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 
ஈரோடு பெருந்துறை மருத்துவக் கல்லூரிக்கு 100 படுக்கைகள் கொண்ட புதிய ஐசியூ பிளாக் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.