ஜீயர் உண்ணாவிரதம், வைரமுத்துவை கண்டித்து எஸ்.வி சேகர் டுவீட்!

Last Modified வியாழன், 8 பிப்ரவரி 2018 (13:41 IST)
ஆண்டாள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததாக கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக பல இந்து அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்தன. பலரும் போராட்டங்கள் நடத்தி வைரமுத்துவுக்கு நெருக்கடி கொடுத்தனர்.
 
இதனால் வைரமுத்து தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார். இருந்தாலும் வைரமுத்து ஆண்டாள் சன்னதியில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.
 
இதனையடுத்து ஜீயர் தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். இதனையடுத்து வைரமுத்து பிப்ரவரி 3-ஆம் தேதிக்குள் ஆண்டாள் சன்னதிக்கு வந்து மன்னிப்பு கேட்காவிட்டால் தான் மீண்டும் உண்ணாவிரதத்தை ஆரம்பிப்பேன் என மீண்டும் நெருக்கடி கொடுத்தார் ஜீயர்.
 
ஆனால் வைரமுத்து மன்னிப்பு கேட்கவில்லை. இந்நிலையில் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் சடகோப ராமனுஜம் வைரமுத்துவை கண்டித்து இன்று முதல் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக நேற்று அறிவித்து தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்துள்ளார்.
 
இந்நிலையில் ஆண்டாள் விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்தே வைரமுத்து மீது கோபத்தில் உள்ள நடிகரும் பாஜக ஆதரவாளருமான எஸ்.வி சேகர் தனது டுவிட்டரில் வைரமுத்து மீதான் தனது கோபத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார்.
 
மடாதிபதிகள் மன வருத்தத்தில் உண்ணாவிரதம் இருப்பதால் மதுரை கோயில் தீவிபத்து போன்ற துர் சகுனங்கள். பாவத்திற்கு பரிகாரம் உண்டு. சாபத்திற்கு பரிகாரமில்லை.  ஆண்டாளின் சக்தியை வைரமுத்து உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை. பக்தர்களின் வேண்டுகோளுக்காக ஜீயர் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என கூறியுள்ளார் எஸ்.வி.சேகர்.


இதில் மேலும் படிக்கவும் :