ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 8 பிப்ரவரி 2018 (12:06 IST)

லஞ்சப்புகாரில் சிக்கிய துணைவேந்தரின் ஜாமீன் மனு தள்ளுபடி; நீதிமன்றம் அதிரடி

பேராசிரியர் பணி நியமனத்திற்கு 30 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் அதிரடியாக தீப்பளித்துள்ளது.
கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணிபுரிந்து வந்தவர் கணபதி. இவர், உதவி பேராசிரியர் பணி நியமனத்திற்கு தன்னிடம் ரூ.30 லட்சம் லஞ்சம் கேட்டார் எனவும் அதில் ஒரு லட்சத்தை ரொக்கமாகவும், மீதி ரூ.29 லட்சத்தை காசோலையாகவும் கணபதியிடம் கொடுத்ததாக சுரேஷ் என்பவர் லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் அளித்தார். துணைவேந்தர் கணபதி பொறுப்பேற்ற பின், துப்புரவு பணி முதல் பேராசிரியர் பணியிடம் வரை, 250க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. ரூ.80 கோடி வரை லஞ்சம் பணம் கை மாறியதாக கூறப்படுகிறது. 
 
அதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கடந்த வாரம் பாரதியார் பல்கலைக்கழகத்தில் திடீர் சோதனை நடத்தினர். முடிவில் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக துணைவேந்தர் கணபதியை போலீசார் கைது செய்தனர். கணபதிக்கு உடந்தையாக இருந்த வேதியியல் துறை பேராசிரியர் தர்மராஜ், பாரதியார் பல்கலைக்கழக தொலைதூர பொறுப்பு இயக்குநர் மதிவாணன் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
 
கணபதி ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு அளித்திருந்த நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது என நீதிமன்றம் அதிரடியாக தீர்பளித்துள்ளது. மேலும் லஞ்ச ஒழிப்புத்துறை கணபதியை 6 நாள் காவலில் எடுத்து விசாரிக்க மனு அளித்திருக்கிறது. அந்த மனுவின் மீதான விசாரணை நாளை விசாரணைக்கு வர இருக்கிறது. கணபதிக்கு உடந்தையாக இருந்த தர்மராஜிற்கும் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.