நீட் தேர்வு எழுத வந்த மாணவி மரணம் – மதுரையில் நடந்த சோகம் !
மதுரையில் நீட் எழுத வந்த மாணவி ஒருவர் திரும்பி ஊருக்கு செல்லும் போது உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் நேற்று நீட் தேர்வுகள் பலக் கட்டுப்பாடுகளுடன் நடந்து முடிந்தது. மதுரையில் உள்ள நீட் தேர்வு மையத்துக்கு கமுதியில் இருந்து வந்த சந்தியா என்ற மாணவி வந்துள்ளார். தேர்வெழுதும் போதே ஒரு தடவை மயக்கமடைந்த மாணவியை கண்காணிப்பாளர் அவருக்குத் தண்ணீர் கொடுத்து சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு மீண்டும் தேர்வெழுத அனுமதி அளித்துள்ளார்.
இதனையடுத்து தேர்வு முடிந்து மீண்டும் ஊருக்குத் தந்தை முனுசாமியோடு சந்தியா கிளம்பியுள்ளார். ஆனால் பேருந்திலேயே சந்தியா மயக்கமடைந்துள்ளார். இதனையடுத்து சந்தியாவை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார் அவரது தந்தை. அங்கிருந்து அவரை மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு மாற்றும் படி மருத்துவர்கள் கூறியுள்ளனர் அங்கிருந்து ஆம்புலன்ஸில் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்து சென்றுள்ளனர். அங்குள்ள மருத்துவர்கள் சந்தியாவைப் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். இதனால் அவர் தந்தை அதிர்ச்சியடைந்து கதறி அழ ஆரம்பித்துள்ளார். அதன்பின்னர் அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். நலமாக இருந்த சிறுமி நீட் தேர்வில் வெற்றிப் பெறவேண்டுமென கடந்த சில நாட்களாக மனதளவில் பதற்றமாக இருந்ததாக சந்தியாவின் தந்தை கூறியுள்ளார்.