செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 14 ஜூலை 2020 (10:24 IST)

சூர்யாவின் பைக்கை இரவல் வாங்கிய அஜித்; ஆளை மாற்றி தீர்த்துக்கட்டிய கும்பல்! – அரக்கோணத்தில் பரபரப்பு!

அரக்கோணத்தில் நண்பரின் பைக்கை இரவல் வாங்கி சென்ற இளைஞரை மர்ம கும்பல் வெட்டி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் முட்டவாக்கத்தை சேர்ந்தவர் அஜித் குமார். இவர் தனது மற்றொரு நண்பர் விக்னேஷுடன் மது அருந்த சென்றுள்ளார். இதற்காக தனது நண்பர் சூர்யாவிடமிருந்து பைக்கை இரவல் வாங்கி சென்றுள்ளார். இருவரும் திருமால்பூர் அருகே உள்ள ஓரிடத்தில் இருவரும் மது அருந்தி கொண்டிருந்த நிலையில் திடீரென அரிவாள் சகிதம் சுற்றி வளைத்த கும்பல் அஜித் மற்றும் விக்னேஷ் இருவரையும் தாக்க தொடங்கியது.

அதில் விக்னேஷ் தப்பி ஓடிவிட அஜித்தை சூழ்ந்த கும்பல் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியுள்ளனர். இதனால் அஜித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக அரக்கோணம் போலீஸார் சந்தேகத்தின் பேரில் 7 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு பாலுசெட்டி சத்திரத்தில் இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக சூர்யா மீது வழக்கு உள்ளது. இதனால் சூர்யா மீது பழிவாங்கும் எண்ணத்தில் சிலர் இருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் சூர்யாவிடமிருந்து அஜித் பைக்கை இரவல் வாங்கி சென்றுள்ளார். சூர்யாவின் பைக் திருமால்பூர் பகுதியில் நிற்பதாக தகவல் கிடைத்த மாத்திரத்தில் விரைந்த கும்பல் தவறுதலாக சூர்யா என நினைத்து அஜித்தை கொன்றிருப்பதாக போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் காஞ்சிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.