திமுக தலைவர் போட்டிக்காக வேட்புமனு தாக்கல் செய்த மு.க. ஸ்டாலின்
திமுக தலைவர் பதவிக்காக 28 ஆம் தேதி நடைபெறும் தேர்லில் போட்டியிட செயல்தலைவர் ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி ஆகஸ்ட் 7 ஆம் தேதி இயற்கை எய்தினார். அவரது மறைவு இந்திய அரசியல் வட்டாரத்தில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது. அவரது மறைவிற்கு நாடெங்கிலிருந்தும் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில் திமுகவின் அடுத்த தலைவராக ஸ்டாலின் பதவி ஏற்பார் என்றிருந்த நிலையில், மு.க அழகிரியால் பிரச்சனை வரும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றாற்போல் மு.க அழகிரியின் பேச்சு இருந்தது அனைவரும் அறிந்ததே.
ஆனால் நேற்று திடீரென செய்தியாளர்களிடம் பேசிய அவர் தாய் கழகமான திமுகவில் நான் சேருவதில் எந்த தவறும் இல்லை என திடீரென பேக்கடித்தார்.
திமுகவின் தலைவர், பொருளாளர் பதவிகளுக்கான தேர்தல் வரும் 28ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தலைவர் பதவிக்கான வேட்புமனுவை 65 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய அதனை சற்று முன்னர் ஸ்டாலின், திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதியிடம் அளித்தார். அதேபோல் பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக ஸ்டாலின் கருணாநிதி சமாதிக்கு சென்று தனது வேட்புமனுவை வைத்து ஆசி பெற்றார். அதேபோல் துரைமுருகனும் ஆசி பெற்றார்.