வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 6 மார்ச் 2019 (10:26 IST)

ஜி கே வாசனை கழட்டி விட்ட ஸ்டாலின் – பின்னணி என்ன ?

திமுக கூட்டணியில் சீட் தருகிறோம் எனக் கூறி கடைசியில் ஸ்டாலின் ,ஜி கெ வாசனைக் கழட்டி விட்டுள்ளதன் பின்னணி என்ன அரசியலில் பல கருத்துகள் உலாவர ஆரம்பித்துள்ளன.

தமிழகக் காங்கிரஸில் இருந்து பிரிந்த மூப்பனார் தமிழ் மாநிலக் காங்கிரஸ் என்றக் கட்சியைத் தொடங்கினார். தமிழகத்தில் குறிப்பிடத்தகுந்த கட்சியாக மாறிக்கொண்டிருந்த த.மா.க. மூப்பனாரின் இறப்பிற்குப் பின் மெல்ல தேய ஆரம்பித்தது. அதன் பின் அவரது மகன் ஜிகே வாசன் அக்கட்சிக்குத் தலைவராகப் பொறுப்பேற்றார். இடையில் கட்சியைக் கலைத்துவிட்டு மீண்டும் காங்கிரஸிலேயே சேர்ந்தார். பின்னர் சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் காங்கிரஸில் இருந்து பிரிந்து மீண்டும் த.மா.க-ஐ ஆரம்பித்தார்.

ஆனால் தேர்தல் நேரங்கள் தவிர மற்ற நேரங்களில் தமாக என்றொரு கட்சி இருப்பதே யாருக்கும் தெரியாமல்தான் இருக்கிறது. இந்நிலையில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சியுடன் வாசன் கூட்டணி வைக்கப்போகிறார் என்ற கேள்வி சில நாட்களுக்கு முன் எழுந்தது. கூட்டணித் தொடர்பாக அதிமுக வோடு பேசி வருவதாகக் கூறப்பட்டது.

முதலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற அவர் நினைத்தாலும் திமுகவிலும் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றிருந்ததால் அவர்கள் இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளனர். அதனால் நான் காங்கிரஸிடம் பேசி சமாதானப்படுத்துகிறேன் என்றும் கடைசி நேரத்தில் உங்களுக்கான சீட் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன் என்றும் உறுதியளித்துள்ளார். ஆனால் கடைசிவரை தமாகவைக் கூட்டணிக்குள் கொண்டுவர காங்கிரஸ் ஒத்துக்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் ஸ்டாலினும் அந்த முயற்சியைக் கைவிட்டிருக்கிறார். நேற்று கூட்டணிப் பற்றிய இறுதி முடிவுகள் எடுக்கப்பட்டு விட்டதாகவும் இனி திமுக கூட்டணிக்குள் வேறு கட்சிகள் இடம்பெற வாய்ப்பில்லை எனவும் அவர் கூறியுள்ளார். இதனால் ஜிகே வாசனுக்கு திமுகக் கூட்டணியில் இடமில்லை என்பது உறுதியாகியுள்ளது. இதனால் வருத்தமடைந்துள்ள வாசன் அதிமுகவிடம் மயிலாடுதுறை தொகுதியைக் கேட்டுள்ளதாக தெரிகிறது.