1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 17 ஜூன் 2025 (16:48 IST)

எந்த கூட்டணியாக இருந்தாலும் 40 வேண்டும்: உறுதியாக இருக்கும் தேமுதிக..

Premalatha
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கட்சியின் தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். தொகுதிவாரியாக நடைபெற்ற இக்கூட்டத்தில், கட்சியின் வளர்ச்சி மற்றும் எதிர்கால வியூகம் குறித்து நிர்வாகிகள் பல்வேறு கருத்துகளை முன்வைத்தனர்.
 
குறிப்பாக, கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தங்களை உரிய மரியாதையுடன் நடத்தவில்லை என்றும், தேர்தல் பணிகளில் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் தே.மு.தி.க. நிர்வாகிகள் வெளிப்படையாக கூறினர். இது கூட்டணியில் இருந்த அதிருப்தியை காட்டியது.
 
கட்சி பலப்படுத்துதல் குறித்து, தே.மு.தி.க. தொலைக்காட்சியை மீண்டும் தொடங்க வேண்டும் எனவும், நிர்வாகிகளுக்கு செலவுக்காக கட்சித் தலைமை நிதியுதவி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். மேலும், கட்சியை வலுப்படுத்த ஆறு மாதத்திற்கு ஒருமுறை சுற்றுப்பயணங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், தங்களுக்கு சாதகமான தொகுதிகளை அடையாளம் கண்டு, அவற்றை பலப்படுத்தி, கூட்டணியின்போது அவற்றை உறுதியாக பெற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
 
மிக முக்கியமாக, இந்த முறை எந்தக் கூட்டணியில் இணைந்தாலும், குறைந்தபட்சம் 40 தொகுதிகளை கேட்டுப் பெற வேண்டும் என நிர்வாகிகள் ஒருமித்த குரலில் வலியுறுத்தினர். யார் சிறந்த ஒத்துழைப்பு தருகிறார்களோ, அவர்களுடனேயே கூட்டணி அமைக்க வேண்டும் என்ற கருத்தையும் அவர்கள் முன்வைத்தனர். 
 
Edited by Mahendran