நீட் தேர்வுக்கு நாங்கள் காரணமா ? – முதல்வருக்கு எதிராக ஸ்டாலின் அறிக்கை !

Last Modified சனி, 13 ஜூலை 2019 (12:40 IST)
நீட் தேர்வு தமிழகத்துக்குள் வந்ததுக்கு காரணமே திமுகவும் காங்கிரஸும் தான் என குற்றம்சாட்டிய எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுக கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது.

நீட் தேர்வு விலக்கு தொடர்பாக 2017ஆம் ஆண்டு தமிழகச் சட்டமன்றத்தில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டன. அந்த இரண்டு தீர்மானங்களையும் நிராகரித்துவிட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜூலை 6ஆம் தேதி மத்திய அரசு தெரிவித்தது.  இந்த தகவலை சட்டத்துறை அமைச்சர் மறைத்து விட்டதாக இன்று சட்டமன்றத்தில் திமுக கவன ஈர்ப்பு மசோதா கொண்டு வந்தது. மேலும் இந்த விஷயத்தில் அவர் பதவி விலக வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியது. இது சில நாட்களாக சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இது சம்மந்தமாக மதுரைக்கு வந்த முதல்வர் பழனிச்சாமியிடம் கேள்வி எழுப்பியபோது ‘2010ஆம் ஆண்டு திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சி நடந்துகொண்டிருந்த போதுதான் நீட் தேர்வு குறித்த அறிவிப்பு வெளிவிடப்பட்டது. அப்போது அதை அவர்கள் எதிர்க்கவில்லை. மக்களிடம் எதிர்ப்பு வந்தவுடன் இப்போது பழியை எங்கள் மீது சுமத்துகின்றனர்.. தூங்குபவர்களை எழுப்பிவிடலாம் ஆனால் தூங்குவது போல நடிப்பவர்களை எழுப்ப முடியாது’ எனப் பதிலளித்தார்.

இதற்கு மறுப்புத் தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின் ‘நீட் தேர்வு பற்றிய அறிவிப்பு வந்தவுடனேயே அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த கலைஞர் அது சம்மந்தமாக மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத்துக்குக் கடிதம் எழுதினார். மேலும் திமுகவும் காங்கிரஸும் ஆட்சியில் இருக்கும் வரை தமிழகத்திற்குள் நீட் வரவில்லை. மத்தியில் பாஜகவும் மாநிலத்தில் அதிமுகவும் ஆட்சியில் இருக்கும்போதுதான் வந்தது. நீட் மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்ட பிறகும் 21 மாதங்கள் அதை மறைத்து அரசியல் சட்டப் பிரிவில் “வித்ஹெல்டு” என்ற வார்த்தையின் அர்த்தம் கூடத் தெரியாமல் சட்டமன்றத்திற்குத் தவறான தகவலைத் தந்து கொண்டிருப்பதும் அதிமுக அமைச்சர்களும், முதலமைச்சரும்தான்’ எனத் தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :