சிறப்பு தொழுகை நடத்த அனுமதி கிடையாது! – தள்ளுபடி செய்த நீதிமன்றம்
ரம்ஜான் அன்று சிறப்பு தொழுகை நடத்த அனுமதி கேட்டு உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு தள்ளபடி செய்யப்பட்டது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. மே இறுதி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மே 25 அன்று இஸ்லாமிய பண்டிகையான ரம்ஜான் கொண்டாடப்பட இருக்கிறது. ரம்ஜான் பண்டிகையின்போது மக்கள் தங்கள் வீடுகளிலேயே தொழுகை நடத்துமாறு தலைமை ஹாஜி அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் ரம்ஜான் அன்று மதுரையில் உள்ள மசூதிகளில் 2 மணி நேரம் மட்டும் சிறப்பு தொழுகைக்கு அனுமதி அளிக்குமாறு சாகுல் ஹமீது என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு அளித்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் வழிபாட்டு தலங்களை திறப்பதன் மீதான முடிவுகள் மத்திய மற்றும் மாநில அரசினை சார்ந்தவை என்றும், இதனால் நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட முடியாது என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்துள்ளது.