திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 9 ஆகஸ்ட் 2018 (16:31 IST)

மெரினா விவகாரம் : டிராபிக் ராமசாமி மீது அவதூறு வழக்கு

மெரினாவில் தலைவர்களின் உடலை அடக்கம் செய்யக்கூடாது என நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், நீதிபதி லஞ்சம் பெற்றுக்கொண்டு திமுகவிற்கு சாதகமாக செயல்பட்டார் என குற்றம் சாட்டிய சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 
திமுக தலைவர் கருணாநிதி காலமானதை அடுத்து, அவரது உடலை மெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகில் அடக்கம் செய்ய தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடப்பட்டது. ஆனால் இதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. சட்ட சிக்கல்கள் இருப்பதாக கூறி, கிண்டி காமராஜர் நினைவிடத்தில் அவரை உடலை புதைக்க அரசு நிலம் ஒதுக்கியது.  
 
ஆனால், மெரினாவில் இடம் வேண்டும் என திமுக தரப்பு நீதிமன்றத்தை நாடியது. அதேநேரம், மெரினாவில் ஜெ.வின் சமாதிக்கு எதிராக தொடுக்கப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டதாகவும்,  டிராபிக் ராமசாமி தரப்பு வழக்கறிஞர் மட்டும், கருணாநிதியின் உடலை மெரினாவில் புதைத்துக்கொள்ளுங்கள். ஆனால், வழக்கை முடிக்கக் கூடாது எனக் கூறியதாகவும் செய்திகள் வெளியானது.  
 
அதாவது டிராபிக் ராமசாமி தரப்பு வழக்கறிஞர் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றி மாற்றி பேசியதால் கோபமடைந்த நீதிபதி மற்ற 4 மனுக்களோடு சேர்த்து, அவர் மனுவையும் தள்ளுபடி செய்து விட்டு, மெரினாவில் கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்யலாம் என தீர்ப்பளித்தார். இதையடுத்து, கருணாநிதியின் உடல் மெரினாவில் உள்ள அண்ணா சமாதிக்கு அருக்கே நல்லடக்கம் செய்யப்பட்டது.
 
ஆனால், இது தொடர்பாக டிராபிக் ராமசாமியிடம் ஒரு பத்திரிக்கையாளர் செல்போனில் கேட்டபோது “நான் வழக்கை வாபஸ் பெறவில்லை. நீதிபதி அவரது அதிகாரத்தை பயன்படுத்தி தள்ளுபடி செய்துவிட்டார். அந்த நீதிபதி லஞ்சம் வாங்கி விட்டார். நான் நிச்சயம் உச்ச நீதிமன்றம் செல்வேன். நான்கு சமாதிகளையும் தூக்கி விடுவேன்” என அவர் ஆவேசமாக பேசும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
 
எனவே, அவர் மீது தற்போது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவர் நீதிமன்றத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியுள்ளதாகவும், ஆதாரமில்லாமல் நீதிபதியின் மீது புகார் கூறியுள்ளதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.