1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 8 ஆகஸ்ட் 2018 (15:32 IST)

நான் வழக்கை வாபஸ் பெறவில்லை : அடம் பிடிக்கும் டிராபிக் ராமசாமி

மெரினாவில் தலைவர்களின் சமாதிகளை அமைக்கக் கூடாது என  நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கை நான் இன்னும் வாபஸ் பெறவில்லை என டிராபிக் ராமசாமி அதிர்ச்சி கிளப்பியுள்ளார்.

 
திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.30 மணிக்கு காலமானார். இவரது உடலை மெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகில் அடக்கம் செய்ய தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடப்பட்டது. ஆனால் இதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. சட்ட சிக்கல்கள் இருப்பதாக கூறி, கிண்டி காமராஜர் நினைவிடத்தில் அவரை உடலை புதைக்க அரசு நிலம் ஒதுக்கியது. 
 
ஆனால், மெரினாவில் இடம் வேண்டும் என திமுக தரப்பு நீதிமன்றத்தை நாடியது. அதேநேரம், மெரினாவில் ஜெ.வின் சமாதிக்கு எதிராக தொடுக்கப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டதாகவும்,  டிராபிக் ராமசாமி தரப்பு வழக்கறிஞர் மட்டும், கருணாநிதியின் உடலை மெரினாவில் புதைத்துக்கொள்ளுங்கள். ஆனால், வழக்கை முடிக்கக் கூடாது எனக் கூறியதாகவும் செய்திகள் வெளியானது. 
 
அதாவது டிராபிக் ராமசாமி தரப்பு வழக்கறிஞர் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றி மாற்றி பேசியதால் கோபமடைந்த நீதிபதி மற்ற 4 மனுக்களோடு சேர்த்து, அவர் மனுவையும் தள்ளுபடி செய்து விட்டு, மெரினாவில் கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்யலாம் என தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பு கருணாநிதியின் குடும்பத்தினர் மற்றும் திமுக தொண்டர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகே கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்வதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. 
 
இந்நிலையில், இது தொடர்பாக டிராபிக் ராமசாமியிடம் ஒரு பத்திரிக்கையாளர் செல்போனில் கேட்டபோது “நான் வழக்கை வாபஸ் பெறவில்லை. நீதிபதி அவரது அதிகாரத்தை பயன்படுத்தி தள்ளுபடி செய்துவிட்டார். அந்த நீதிபதி பணம் வாங்கி விட்டார். நான் நிச்சயம் உச்ச நீதிமன்றம் செல்வேன். சமாதி அமைய விட மாட்டேன்” என அவர் கோபமாக பேசும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.