1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. senthil balaji not attend for summon in police station

சம்மனை புறக்கணித்த செந்தில் பாலாஜி: தலைமறைவாக இருக்கும் முன்னாள் அமைச்சரின் அடுத்த கட்டம் என்ன?

senthil balaji
தமிழக வெற்றிக் கழக  ஆட்சியை பலகோடி ரூபாய் குதிரை பேரம் பேசி கவிழ்க்க முயன்றதாக பதியப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக் குமார் ஆகியோர் இன்று காலை 10:30 மணிக்கு காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு காவல்துறையினர் சம்மன் அனுப்பியிருந்தனர். கரூர் இல்லத்தில் அவர்களது பெற்றோரிடம் இந்த சம்மன் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், குறிப்பிட்ட நேரத்தை கடந்தும் இருவரும் போலீஸ் முன்னிலையில் ஆஜராகவில்லை.
 
இதன் மூலம் கடந்த ஆறு நாட்களாக அவர்கள் தொடர்ந்து தலைமறைவாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வழக்கில் தொடர்ந்து புதிய நபர்கள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பிக்கு எதிரான பிடி இறுகி வருகிறது. இவர்கள் இருவரும் வெளிநாடுகளுக்குத் தப்பி செல்வதை தடுக்கும் பொருட்டு, சென்னை காவல்துறை சார்பில் அனைத்து விமான நிலையங்களுக்கும் 'லுக் அவுட்' நோட்டீஸ் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
தற்போது வெளிநாடு செல்லவும் முடியாமல், சட்டத்தின் முன் ஆஜராகவும் அஞ்சி தலைமறைவாக உள்ள செந்தில் பாலாஜியின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எகிறியுள்ளது. சட்ட வல்லுநர்களின் கணிப்புப்படி, அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளன. அதே நேரத்தில், தனிப்படைகள் அமைத்து தேடி வரும் காவல்துறையினர் முன்கூட்டியே அவரை கைது செய்யக் கூடும் என்பதால், தமிழக அரசியலில் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.