1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 27 செப்டம்பர் 2024 (12:31 IST)

செந்தில் பாலாஜிக்கு மீண்டும் சிக்கல்.! "மின்மாற்றி கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல்" - அன்புமணி ராமதாஸ்.!!

Anbumani
மின்மாற்றி கொள்முதலில் நடந்த முறைகேடுகளில் முதல் எதிரியாக விசாரிக்கப்பட வேண்டியவர் மின்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி என்றும் இது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு  தமிழ்நாடு அரசு ஆணையிட வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு 2021-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரை மின் வாரியத்திற்கு அதிக விலை கொடுத்து 45,800 மின்மாற்றிகள் வாங்கப்பட்டதில் வாரியத்திற்கு ரூ.400 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும், அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு கையூட்டுத் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனரகத்தில் அறப்போர் இயக்கம் புகார் அளித்து ஓராண்டுக்கும் மேலாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 
 
அரசு நிர்வாகத்தை சீரழிக்கும் ஊழல் குறித்த புகார் மீது நடவடிக்கை எடுப்பதில் தமிழ்நாடு அரசும், காவல்துறையும் காட்டும் அலட்சியமும், தாமதமும் கண்டிக்கத்தக்கவை.திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மின்சார வாரியத்திற்கு 45,800 மின்மாற்றிகள் வாங்கப்பட்டிருக்கின்றன. வெளிப்படையான ஒப்பந்தப்புள்ளிகள் மூலம் பல்வேறு ஒப்பந்ததாரர்களிடமிருந்து அவர்கள் குறிப்பிட்ட விலைப்புள்ளிகளை விட குறைந்த விலைக்கு மின்மாற்றிகள் வாங்கப்பட்டதாக அரசு கூறிக்கொள்ளும் போதிலும், வெளிச்சந்தையை விட அதிக விலை கொடுத்து தான் மின்மாற்றிகள் வாங்கப்பட்டுள்ளன.  
 
எடுத்துக்காட்டாக 2021-ஆம் ஆண்டில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, 2022-ஆம் ஆண்டில் 500 கிலோ வோல்ட்ஸ் ஆம்பியர்(KVA) திறன் கொண்ட 800 மின்மாற்றிகள் வாங்கப்பட்டன. அதற்காகக் கோரப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகளில் 26 ஒப்பந்ததாரர்கள் சொல்லி வைத்தது போன்று ஒரு மின்மாற்றிக்கு ரூ.13,72,930 என்ற விலையை குறிப்பிட்டிருந்தனர். அதைத் தொடர்ந்து அவர்களுடன் பேச்சு நடத்தி விலையைக் குறைத்து ரூ.12,49,800 என்ற விலைக்கு வாங்கியதாக மின்வாரியம் தெரிவித்தது. ஆனால், மத்திய அரசால் நடத்தப்படும் மின்னணு சந்தைத் தளத்தில் இதன் விலை ரூ.8,91,000 மட்டும் தான்.

தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் சங்கத்தினர் குறிப்பிடும் விலை ரூ.7,89,753 தான். இவை அனைத்தையும் விட குறைவாக ஒரு மின்மாற்றி ரூ.7,87,311 என்ற விலைக்கு இராஜஸ்தான் மாநில அரசு வாங்கியுள்ளது. மின்மாற்றிகளை வாங்குவதில் திட்டமிட்ட கூட்டுச் சதி நடைபெற்றுள்ளது. ஆட்சியாளர்களின் ஆசி பெற்ற ஒப்பந்ததாரர்கள் திட்டமிட்டு சந்தை விலையை விட 50% கூடுதலாக விலையை குறிப்பிட்டுள்ளனர். ஒப்பந்த ஏலத்தில் பங்கேற்ற அனைத்து ஒப்பந்ததாரர்களும் சொல்லி வைத்தது போல ஒரே விலையை, அதுவும் சந்தை விலையை விட அதிக விலையை குறிப்பிடுவது இயல்பாக நடக்க வாய்ப்பில்லை. கூட்டு சதி நடந்தால் தான் இது சாத்தியம். 
 
ஒப்பந்ததாரர்கள் கட்டுபடியாகும் விலையை குறிப்பிடவில்லை என்றால், அந்த ஒப்பந்த ஏல நடைமுறையை ரத்து செய்து விட்டு, புதிய ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாமல் அவர்கள் குறிப்பிட்ட விலையில் சிறிதளவு குறைத்து மின்வாரியத்துக்கு பணத்தை மிச்சப்படுத்தியதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது தமிழக அரசு. 2021 முதல் 2023 வரை மொத்தம் 10 முறை ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. ஒவ்வொரு முறையும் இதேபோன்ற கூட்டுச்சதியும், முறைகேடுகளும் அரங்கேற்றப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக ரூ.1182 கோடிக்கு பல்வேறு திறன் கொண்ட மின்மாற்றிகள் வாங்கப்பட்டதில் ரூ.397 கோடி அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த முறைகேடு குறித்து அனைத்து ஆதாரங்களுடன் அறப்போர் இயக்கம் கடந்த ஆண்டு ஜூலை 6&ஆம் நாள் கையூட்டுத் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனரகத்தில் அறப்போர் இயக்கம் புகார் அளித்தது. ஆனால், அதன் மீது முதற்கட்ட விசாரணையைக் கூட இதுவரை காவல்துறை தொடங்கவில்லை. அறப்போர் இயக்கம் கடந்த காலங்களில் பல்வேறு ஊழல்களையும், முறைகேடுகளையும் வெளிக்கொண்டு வந்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின் போது அறப்போர் இயக்கம் ஒவ்வொரு முறை ஊழல் புகார்களைக் கூறும் போதும் அதை சுட்டிக்காட்டி, அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று முழங்குவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார் அன்றைய எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின் அவர்கள்.

ஆனால், இப்போது முதலமைச்சரானவுடன் அறப்போர் இயக்கத்தின் குரல்கள் அவரது செவிகளில் விழவில்லை. மின்மாற்றி கொள்முதலில் ஏற்பட்ட இழப்புக்குக் காரணம் அப்போதைய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மின்வாரியத் தலைவர் இராஜேஷ் லகானி, நிதி கட்டுப்பாட்டாளர் வி.காசி ஆகியோர் தான் என்று குற்றம் சாட்டுவதற்கு போதுமான ஆதாரங்கள் கையூட்டுத் தடுப்புப் பிரிவிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஆனாலும், அவற்றின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கையூட்டுத் தடுப்புப் பிரிவு அமைதி காப்பது ஏன்? ஆளுங்கட்சி தரப்பில் தரப்படும் அழுத்தம் தான் அதற்கு காரணம் என்பதைத் தவிர வேறு எதுவுமில்லை. தமிழ்நாடு கையூட்டுத் தடுப்புப் பிரிவு நடுநிலையான, நேர்மையான அமைப்பாக செயல்படவில்லை என்றும், ஆட்சிக்கு யார் வந்தாலும் அவர்களுக்கு ஆதரவாகவே செயல்படுவதாகவும் சென்னை உயர்நீதிமன்றம் பலமுறை கண்டனம் தெரிவித்திருக்கிறது.

ஆனாலும், கையூட்டுத் தடுப்புப் பிரிவு அதன் அணுகுமுறையை மாற்றிக் கொள்ளாமல் ஆட்சியாளர்களின் ஊழல்களை மூடி மறைக்க துணைபோவது நியாயம் அல்ல. மின்மாற்றி கொள்முதலில் நடந்த முறைகேடுகளில் முதல் எதிரியாக விசாரிக்கப்பட வேண்டியவர் மின்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி. ஊழல் வழக்கில் சிறை சென்று 471 நாள் சிறைவாசத்திற்குப் பிறகு விடுதலையான அவரை பெருந்தியாகம் செய்தவர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டுகிறார். செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக அரசு எந்திரமே செயல்படுகிறது. அவ்வாறு இருக்கும் போது, மின்மாற்றி கொள்முதல் முறைகேடு விவகாரத்தில் நியாயம் கிடைக்காது. 

 
எனவே, மின்மாற்றி கொள்முதலில் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்பட்டது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழ்நாடு அரசு ஆணையிட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.