வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 27 செப்டம்பர் 2024 (12:35 IST)

"தமிழக திட்டங்களுக்கான நிதியை விடுவிக்க வேண்டும்" - பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்..!!

Stain Modi Meet
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் உள்ளிட்ட தமிழக திட்டங்களுக்கான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தினார்.
 
அண்மையில் அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய முதல்வர் மு.க ஸ்டாலின், தமிழ்நாட்டுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு நிறுத்திவைத்து இருப்பது மற்றும் 2-ஆம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ் நிதியை விடுவிக்க மறுப்பது ஆகியவை தொடர்பாக பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளதாக தெரிவித்தார்.  
 
அதன்படி பிரதமர் மோடியை சந்திப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று மாலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். தொடர்ந்து இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கப் புறப்பட்ட, முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக காவல் படையினர் மரியாதை செலுத்தினர். இதன் பின்னர் பிரதமரின் அலுவலகத்திற்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

அப்போது தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக தடம் பெட்டகத்தை பிரதமர் மோடிக்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசளித்தார். மேலும் நெல்லையில் தயாரிக்கப்படும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழை நார் கூடை,  பனை ஓலை ஸ்டாண்ட், டெரகோட்டா சிற்பங்கள், பித்தளை விளக்கு, நீலகிரி தோடா எம்பிராய்டரி சால், பவானி ஜமுக்காளத்தையும் முதல்வர் ஸ்டாலின் பரிசளித்தார்.
 
தமிழகத்திற்கு சமக்ரா சிக்ஷா என்ற ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனே விடுவிக்க வேண்டும் என்று பிரதமரிடம், முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
 
சென்னை 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிதியை உடனே வழங்க வேண்டும், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மேகதாது அணை விவகாரம், முல்லைப் பெரியாறு விவகாரம், ஜிஎஸ்டி இழப்பீடு உள்ளிட்டவை அடங்கிய கோரிக்கை மனுவை பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. 


பிரதமர் மோடியை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சுமார் 45 நிமிடம் சந்தித்து பேசினார். இன்று மாலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் முதல்வர் ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.