ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 26 செப்டம்பர் 2024 (19:20 IST)

சிறையில் இருந்து செந்தில் பாலாஜி விடுதலை.! திரண்ட ஆதரவாளர்கள் - ஸ்தம்பித்த போக்குவரத்து..!!

Senthil Balaji
உச்சநீதிமன்றத்தால் நிபந்தனை ஜாமீன் அளிக்கப்பட்ட செந்தில் பாலாஜி, சென்னை புழல் சிறையில் இருந்து இன்று வெளியேறினார். அப்போது வெளியே திரண்டிருந்த அவரது ஆதரவாளர்கள், பட்டாசு வெடித்தும், ஆட்டம் பாட்டத்துடன் அவரை உற்சாகத்துடன் வரவேற்றனர்.
 
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு கடந்த 471 நாட்களாக சிறையில் இருந்து வந்தார். ஜாமீன் கோரி அவர் அளித்த மனுக்களை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் தொடர்ச்சியாகத் தள்ளுபடி செய்து வந்தன. 
 
நிபந்தனை ஜாமீன்:
 
இதைத்தொடர்ந்து செந்தில் பாலாஜி, உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
 
தீர்ப்பில் குழப்பம்:
 
இதனிடையே,செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்ற தீர்ப்பில் குழப்பம் உள்ளதாக சென்னை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் தெரிவித்தார். பிணை உத்தரவாதத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டாம் என்றும் ED விசாரணை அதிகாரி முன் தாக்கல் செய்யுமாறு நீதிபதி அறிவுறுத்த, விசாரணை அதிகாரி முன் எப்படி தாக்கல் செய்ய முடியும் என செந்தில் பாலாஜி தரப்பு கேள்வி எழுப்பியது. 
 
இதனால் அவர் சிறையில் இருந்து விடுதலையாவதில் சிக்கல் எழுந்தது. பிணை உத்திரவாதத்தை ஏற்பதில் ஆட்சேபனை இல்லை என்று அமலாக்கத்துறை வழக்கறிஞர் ரமேஷ் தெரிவித்தார். 
 
பிணை உத்தரவாதங்கள் ஏற்பு:
 
இதை அடுத்து பிணை உத்திரவாதத்தை நீதிபதி கார்த்திகேயன் ஏற்றுக்கொண்டார்.,செந்தில் பாலாஜியின் உறவினர்கள் இருவர் தலா 25 லட்சம் ரூபாய் பிணை தொகைக்கான ஜாமீன் உத்தரவாதம்  வழங்கினர். மேலும் செந்தில் பாலாஜியின் பாஸ்போர்ட் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.
 
சிறையில் இருந்து வெளியேற்றம்:
 
இந்நிலையில், செந்தில் பாலாஜியின் நிபந்தனை ஜாமின் நகல் சென்னை நீதிமன்றத்தில் இருந்து இமெயில் மூலம் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சிறையில் இருந்து செந்தில் பாலாஜி இன்று (26.09.2024) விடுதலையானார்.
 
ஆதரவாளர்கள் கொண்டாட்டம்:
 
அப்போது, செந்தில் பாலாஜியை வரவேற்க புழல் மத்திய சிறைக்கு முன் திமுக தொண்டர்கள் குவிந்தனர். கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான திமுகவினர் உட்பட திமுக தொண்டர்கள் ஏராளமானோர் புழல் மத்திய சிறை முன்பு திரண்டனர். பட்டாசு வெடித்து, பேண்ட் வாத்தியம் முழங்கி, திமுக கொடிகளுடன்,  செந்தில் பாலாஜியை அவரது ஆதரவாளர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
 
போக்குவரத்து பாதிப்பு:
 
செந்தில் பாலாஜியை வரவேற்க அவரது ஆதரவாளர்கள் திரண்டதால் அப்பகுதி முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.