வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 24 செப்டம்பர் 2024 (09:50 IST)

14 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்: பகுஜன் சமாஜ் பொது செயலாளருக்கு செல்வப்பெருந்தகை நோட்டீஸ்

Selvaperundagai
தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச்செயலாளர் 14 நாட்களில் மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச் செயலாளர் ஜெய்சங்கர் சமீபத்தில் ராகுல் காந்திக்கு அனுப்பிய கடிதத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மீது கொலை தொடர்பான வழக்குகள் உள்ளன என்றும், இந்த வழக்கில் அவரை ஏன் கைது செய்யவில்லை என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர் என்றும், எனவே அவரை கட்சியின் தலைமை பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
 
இந்த நிலையில்தான் தன்னை பற்றி பொய்யான தகவலை பரப்பியதாக ஜெய்சங்கரின் குற்றச்சாட்டுக்கு செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 
 
மேலும்  சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதோடு, வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டுள்ளதால், அவர் 14 நாட்களில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் 10 கோடி ரூபாய் மதிப்பில் அவதூறு வழக்கு தொடரப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 
 
Edited by Siva