திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு சர்ச்சை.! சிறப்பு விசாரணைக் குழு அமைக்க கோரி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அவசர மனு..!!
திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டுக் கொழுப்பு கலந்ததாக கூறப்படும் புகார் தொடர்பாக நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க கோரி விஜயவாடா உயர்நீதிமன்றத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் சார்பில் அவசர வழக்கு தொடரப்பட்டுள்ளது.
திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில், நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பை ஜெகன் மோகனின் அரசு கலந்ததாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டியிருந்தார். சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டுக்கு ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் மறுப்பு தெரிவித்தது.
இதனையடுத்து லட்டு தயாரிக்க பயன்படுத்தபட்ட நெய்யை ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. ஆய்வறிக்கை முடிவில், லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில், மீன் எண்ணெய், சோயா பீன்ஸ், சூரியகாந்தி எண்ணெய், போன்றவைகளுடன் மாட்டுக் கொழுப்பு கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் சார்பில் விஜயவாடா உயர்நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் லட்டு கலப்படம் தொடர்பாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டு குறித்து, உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும் என்றும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு தெரிவித்த விஜயவாடா உயர்நீதிமன்றம், அடுத்த வாரம் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது.
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, இன்று மாலை 3 மணி அளவில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.