திங்கள், 11 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 14 ஏப்ரல் 2022 (08:54 IST)

தம்பி ஏ.ஆர்.ரகுமானுக்கு நெருக்கடி தந்தால்... சீமான் வார்னிங்!

ஏ.ஆர்.ரகுமானுக்கு நெருக்கடி தந்தால் கடும் எதிர்வினையை சந்திக்க நேரிடும் என நாம் தமிழர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 
இது குறித்து சீமான் வெளியிட்ட அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, இந்தித்திணிப்புக்கெதிரான நிலைப்பாட்டை முன்வைத்து, கருத்துத் தெரிவித்ததற்காக அன்புச்சகோதரர் ஏ.ஆர்.ரகுமான் அவர்களைக் குறிவைத்து, இந்துத்துவக்கூட்டமும், வலதுசாரியினரும் தனிநபர் தாக்குதல் தொடுப்பதும், அவரை அச்சுறுத்த முனைவதுமான போக்குகள் கடும் கண்டனத்திற்குரியது.
 
நாட்டின் ஆட்சியும், அதிகாரமும் தங்கள் வசமிருக்கும் துணிவிலும், திமிரிலும் வெளிப்படும் காழ்ப்புணர்ச்சி கொண்ட செயல்பாடுகளையும், வன்மப்பரப்புரைகளையும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது என உறுதிபடத்தெரிவிக்கிறேன். ஆளும் பாஜக அரசின் ஒற்றையாட்சி முறையின் நீட்சியாக இந்தியை எல்லாத்தளங்களிலும் மெல்ல மெல்லத் திணிக்க முற்படுவதும், மாநில மொழிகளை மூன்றாந்தரமாய் நடத்தி, சமவாய்ப்பையும், சமவுரிமையையும் அளிக்க மறுப்பதுமான செயல்பாடுகளுக்கு நாடெங்கிலும் எதிர்ப்புக் கிளம்பியுள்ள நிலையில், சகோதரர் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் ஒட்டுமொத்த தமிழர்களின் எண்ணவோட்டத்தையே தனது கருத்துகளின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார். 
 
ஆங்கிலத்துக்கு மாற்றாக, இந்தியாவின் இணைப்பு மொழியாக இந்தி இருக்க வேண்டுமெனக் கூறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்துப் பதிலுரைக்கும் விதமாக, தமிழை இணைப்பு மொழியாக்கக் கோரியதை முழுமையாக வரவேற்று, வழிமொழிகிறேன். இந்தியாவின் மிக மூத்த மொழி தமிழ்தான்! எல்லாவித இலக்கண, இலக்கியங்களையும் கொண்டு, செழுமையோடு, எவ்விதச்சார்புமற்று தனித்து இயங்கவல்ல உயர்தனிச்செம்மொழியாக விளங்கும் தமிழை, இந்திய நாட்டின் ஆட்சி மொழியாக்க வேண்டுமென எங்கள் மூதாதை ‘கண்ணியமிகு’ காயிதே மில்லத் தொடங்கி, பலர் இந்தியப் பாராளுமன்றத்திலேயே உரைத்துள்ள நிலையில், இந்தியை புகுத்தத் துடிக்கும் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் கொடுஞ்செயலை வன்மையாக எதிர்க்கிறேன்.
 
உலகில் எந்த இனத்துக்கும் இல்லாதவகையில் மிகப்பெரும் உயிரீகங்களை நிகழ்த்தியப் பாரிய மொழிப்போருக்குச் சொந்தமான தமிழ்நாடும், தமிழர்களும் இந்தித்திணிப்பை ஒருநாளும் ஏற்க மாட்டார்கள். கொடுங்கோல் பாஜக அரசு, அதனையும் மீறி வலுக்கட்டாயமாக இந்தியைத் திணிக்க முற்பட்டால் தமிழர் மண் மீண்டுமொரு மொழிப்போரை சமகாலத்தில் நிகழ்த்திக்காட்டுமென்பது திண்ணம். 
 
ஆன்மீகப்பற்று கொண்ட பாம்பன் அடிகள்கூட, ‘இந்தி முதலிய வேறு பாடைகளை யிந்நாட்டகத்தும் விருத்தி செய்ய விழையும் வடநாடரது சுயநலத்தினை யாதரித்தல் தமிழர் கடன்மை யன்றென்பதூஉம்’ என 1899 லேயே பாடி, இந்தித் திணிப்புக்கெதிரான தனது எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தியுள்ளார். இந்தித்திணிப்புக்கெதிராக, மொழிப்போர் களத்தில் தங்கள் இன்னுயிரை ஈந்த எங்கள் முன்னோர்களான நடராசனும், தாளமுத்துவும், கீழப்பழுவூர் சின்னசாமியும், சிவகங்கை இராசேந்திரனும் வாழ்ந்த நிலமிது. 
 
இம்மண்ணும், மக்களும் ஒருநாளும் இந்தியை ஏற்கவோ, அனுமதிக்கவோ மாட்டார்கள். ஆதிக்கம் எந்தவகையில் திணிக்கப்பட்டாலும் அதனை எதிர்த்து, தனித்துவத்தோடு சமர்செய்வது என்பது தமிழர்கள் எங்களது மரபியல் குணம். அந்தவகையில், தமிழின் மீது மாறாப் பற்றுகொண்டு திகழும் சகோதரர் ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் கருத்தென்பது தனிப்பட்ட அவருடையக்கருத்தல்ல; அது தாய்த்தமிழகத்தின் ஒட்டுமொத்த உணர்வின் பிரதிபலிப்பு! அவரும் தனிப்பட்ட ஒரு நபரல்ல; உலகெங்கும் வேர்பரப்பி வாழும் தமிழ்ப்பேரினத்தின் பெருமைமிகு கலை அடையாளம் சகோதரர் ஏ.ஆர்.ரகுமான்.
 
ஆகவே, தமிழ்ப்பேரினத்தின் கலை அடையாளங்களுள் ஒருவராகவும், உலகம் முழுவதும் அறியப்பட்டப் பெரும் படைப்பாளியாகவும் விளங்கும் சகோதரர் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள், மொழிப்பற்றின் விளைவினால் உதிர்த்தக் கருத்துகளுக்காக, அவருக்கெதிராகத் தனிநபர் தாக்குதலும், அச்சுறுத்தலும் விடுக்கப்படுமானால், அது தமிழர்களின் இனமானத்தைச் சீண்டிப்பார்ப்பதாகும். அவருக்கு அரசியல்ரீதியாக நெருக்கடி கொடுக்கவோ, அவர் மீது மதரீதியாகத் தனிநபர் தாக்குதல் தொடுக்கவோ முனைந்தால் கடும் எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடுமென எச்சரிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.