கறிசோறுதான் சாப்பிடுவோம்!என்ன பண்ணுவீங்க? – வட இந்திய சங்கத்தை வெளுத்து விட்ட சீமான்!
வட இந்தியர்கள் விழாவிற்காக தமிழகத்தில் 10 நாட்கள் இறைச்சி கடைகளை மூட கோரிய விவகாரத்தில் சீமான ஆவேசமான அறிக்கையை வெளியிட்டுள்ளார்
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை தொடர்ந்து ஜெயின் பண்டிகைகளும் வருவதால் இறைச்சி கடைகளை தொடர்ந்து 10 நாட்கள் மூட கோரி வட இந்தியர்கள் நல சங்கம் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து அறிக்கை விடுத்துள்ள சீமான வட இந்தியர்கள் நல சங்கத்தின் மீது கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளவை குறித்த சுருக்கம், “தமிழகத்தில் ஏற்கனவே மகாவீரர் ஜெயந்திக்கு இறைச்சி கடைகளை மூடுவது அமலில் உள்ளது, மட்டுமல்லாமல் புத்த பூர்ணிமா, மகாவீரர் ஜெயந்தி போன்ற வட இந்தியர்களின் பண்டிகைகளுக்காக தமிழகத்தில் விடுமுறையும் விடப்படுகிறது, ஆனால் மற்ற எந்த மாநிலங்களும் தமிழர்கள் விழாவான பொங்கலுக்கோ, ஆடிப்பூசத்திற்கோ விடுமுறை அளிப்பதில்லை.
இந்நிலையில் வட மாநிலத்திவர்கள் தாங்கள் பண்டிகை கொண்டாட தமிழகம் முழுவதும் 10 நாட்களுக்கு இறைச்சி கடைகளை மூட சொல்வது அதிர்ச்சியளிக்கிறது. பண்டிகை கொண்டாடுவோர் இறைச்சி உண்ண விருப்பம் இல்லை என்றால் உண்ணாமல் இருக்கலாம். இறைச்சி உண்பவர்களை உண்ண கூடாது என்று சொல்வது ஜனநாயகத்திற்கே விரோதமானது.
வட இந்திய நல சங்கத்தின் இந்த கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளக்கூடாது. அப்படி ஏற்றுக் கொண்டால் ஏற்கனவே கொரோனாவால் பெரும் இழப்பை சந்தித்துள்ள இறைச்சி கடைகளும் அதுசார்ந்த கொள்முதலாளர்கள், ஹோட்டல்கள், விற்பன்னர்கள் என பல லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள். மீறி தமிழக அரசு இறைச்சி தடை விதிக்குமானால் சகல பாதுகாப்புகளுடன் தடையை மீறி இறைச்சி கடைகளை திறக்கவும், பொதுவெளியில் இறைச்சி சமைத்து சாப்பிட்டு போராட்டம் நடத்தவும் நாம் தமிழர் கட்சி தயாராக உள்ளது. இதனால் ஏற்படும் விளைவுகளையும் தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டியுருக்கும் என்பதை தெரிவிக்கிறோம்” என கூறியுள்ளார்.