வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 17 மார்ச் 2017 (14:05 IST)

வெற்று காகிகத்தில் கையெழுத்து வாங்கினார்கள் - ஓ.பி.எஸ் பகீர் தகவல்

தங்களிடம் வெற்று பேப்பரில் கையெழுத்து பெற்று, சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராக நியமித்துக் கொண்டனர் என ஓ.பி.எஸ் அணி, தேர்தல் ஆணையத்திடம் புகார் கூறியிருப்பது தெரிய வந்துள்ளது.


 

 
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என ஓ.,பி.எஸ் அணி தேர்தல் கமிஷனிடம் புகார் அளித்தது. அதற்கு சசிகலா தரப்பு செய்த பதில் மனுவில், தன்னை யாரெல்லாம் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுப்பதற்கு சம்மதம் தெரிவித்து, கையெழுத்திட்டார்களோ, இன்று அவர்களே எனக்கு எதிராக புகார் கொடுத்துள்ளனர். எனவே, அவர்களின் புகார் செல்லாது என கூறப்பட்டிருந்தது. 
 
இந்நிலையில், கடந்த 15ம் தேதி டெல்லிக்கு சென்ற ஓபிஎஸ் அணி, தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை சந்தித்து அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டது செல்லாது எனவும், அதிமுக சட்ட விதிகளின் படி, இரட்டை இலை சின்னம் தங்கள் அணிக்கே சொந்தம் என அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியதோடு, அதற்கான வலுவான ஆதாரங்களையும் சமர்பித்துள்ளது. 
 
மேலும், கடந்த டிசம்பர் மாதம் 29ம் தேதி,  சென்னை, வானரகத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், சசிகலா பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது, அதுபற்றி முன்கூட்டியே தங்களுக்கு எந்த தகவலும் கூறவில்லை எனவும், வெற்று காகிதத்தில் தங்களிடம் கையெழுத்து பெற்று, சசிகலாவை நியமனம் செய்து விட்டனர் எனவும் கூறியுள்ளனர்.
 
இந்த விவகாரம் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக தனது தீர்ப்பை, வருகிற 20ம் தேதி, தேர்தல் கமிஷன் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.