1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 13 டிசம்பர் 2022 (22:29 IST)

காவிரி ஆற்றில் தொடர்ந்து மணல் திருட்டு;லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்

karur
காவிரி ஆற்றில் தொடர்ந்து மணல் திருட்டு நடந்து வருவதையடுத்து அந்த வழியாக சென்ற லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். 
 
கரூர் மாவட்டம், தோட்டக்குறிச்சி பகுதியில் உள்ள காவிரி ஆற்றிலிருந்து ஜல்லி சிமெண்டு கலவை எந்திரம் பொருத்தப்பட்ட லாரியில் தினமும் மணல் திருடிக் கொண்டு செல்லப்படுகிறது.  அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அந்த பகுதி வழியாக வந்த அந்த லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
 
பின்னர் லாரி டிரைவர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை வரவழைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
 
 வாக்குவாதம்: இதையடுத்து போலீசார் ஜல்லி சிமெண்டு கலவை கொண்டு செல்லும் லாரி மீது ஏறி பார்த்தபோது கலவை எந்திரத்தின் உள்ளே நிறைய மணல் இருப்பது தெரியவந்தது. 
 
இந்த மணல் புகழூர் பகுதியில் காவிரி ஆற்றில் கதவணை கட்டும் பணிகளுக்காக கொண்டு செல்லப்படுவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறினர்.

அப்போது திருட்டுத்தனமாக ஏன் சிமெண்டு ஜல்லி கலவை கொண்டு செல்லும் லாரியில் மணலை கொண்டு செல்கிறீர்கள், மணல் ஏற்றி செல்லும் லாரியில் கொண்டு போக வேண்டியது தானே என்று பொதுமக்கள் கூறி பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

மேலும், இந்த லாரியில் தொடர்ந்து மணல் கடத்தப்பட்டு வருவதாகவும், இந்த மணல் கரூர் பகுதிக்கு கொண்டு செல்வதாகவும், லாரி டிரைவர் மீது நடவடிக்கை எடுத்து லாரியை பறிமுதல் செய்ய வேண்டும் என்று போலீசாரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
 
இதையடுத்து போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, லாரி டிரைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
 
இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பின்னர் லாரியுடன், லாரி டிரைவரை விசாரணைக்காக போலீசார் வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.