ஸ்டாலின் கூட்டும் தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கை குழு..மம்தா பானர்ஜி புறக்கணிப்பு..!
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னையில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டுக்குழு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டத்தை கூட்டி உள்ளார். இந்த கூட்டத்திற்கு இந்தியாவின் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ள நிலையில், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இதில் கலந்து கொள்ளாது என்று அறிவித்து, கூட்டத்தை புறக்கணித்துள்ளது.
சென்னையில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தேசிய அளவிலான பல்வேறு கட்சி பிரதிநிதிகள் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அரசின் தொகுதி மறு சீரமைப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, பஞ்சாப், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. போலி வாக்காளர் அடையாள அட்டை விவகாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும், இது பீகார், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், நாளைய ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க முடியாது என்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Edited by Siva