ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 23 செப்டம்பர் 2024 (17:00 IST)

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

RSS Parade
ஊர்வலத்திற்கு அனுமதி அளிப்பதற்கு  விதிமுறைகளை உருவாக்கிய பின்னரும் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் ஏன் தாமதம் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 
 
விஜயதசமியை முன்னிட்டு அக்டோபர் ஆறாம் தேதி அணி வகுப்பு நடத்த அனுமதிக்கோரி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள்  தாக்கல் செய்யப்பட்டன. 

இந்த மனுக்கள் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் கே.எம்.டி. முகிலன், அணி வகுப்புக்கு அனுமதிக்கோரி ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அளித்த மனுக்களை பரிசீலித்து வருவதாகவும், 29ம் தேதிக்குள் முடிவெடுத்து தெரிவிக்கப்படும் என்றார். 
 
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி.கார்த்திகேயன், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி விதிமுறைகள் வகுக்கப்பட்ட பின்னரும் அணி வகுப்புக்கு அனுமதி வழங்கவில்லை என குற்றம்சாட்டினார். 
 
ஒவ்வொரு வருடமும் ஒரே வழித்தடத்தில் தான் அணி வகுப்பு நடைபெறுகிறது என்றும் அதற்கான விதிமுறைகள் எல்லாம் வகுக்கப்பட்ட பின்னரும் அனுமதி வழங்குவதில் ஏன் தாமதம் என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதி விசாரணையை செப்டம்பர் 26ம் தேதிக்கு ஒத்திவைத்தார். 

 
அதற்கு முன்பாக அனுமதிக்க கோரிய விண்ணப்பங்கள் மீது பரிசீலித்து முடிவுகளை அறிக்கையாக தெரிவிக்க  காவல்துறைக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.